நாடாளுமன்ற கட்டிடம் | கோப்புப் படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் பயணம் செய்து ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழுக்களுக்கு மத்திய அரசு ஓர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இதில், எரிசக்தியை சேமிக்கும் நோக்கில் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்டு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அனைத்து துறைகளின் மீது ஆய்வு செய்ய இக்குழுக்கள் நாடு முழுவதும் பயணம் செய்வது வழக்கம்.
இக்குழுக்களில் சுமார் 15 எம்பிக்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இடம்பெறுவார்கள். இவர்களின் பயணங்களுக்கு என பல லட்சம் ரூபாய் செலவாகும். இதில் எரிசக்தி செலவும் அடங்கும்.
இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில், எரிசக்தியை மிச்சப்படுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை ஏற்று பாஜக ஆளும் மாநிலங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றத்திற்காக நாடாளுமன்றத்திலும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, நாடாளுமன்றக் குழுக்கள் மேற்கொள்ளும் ஆய்வுப் பயணங்களுக்குக் கடுமையான விதிமுறைகள் உள்ளன. டெல்லிக்கு வெளியே எந்தவொரு பயணத்திற்கும் மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது குழுக்கள் டெல்லிக்கு வெளியே பயணிக்க முடியாது.
இந்நிலையில், மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலைக் கருத்தில் கொண்டு, எரிசக்தி நெருக்கடியைக் கையாளுமாறு நாடாளுமன்றக் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியாகி உள்ள தகவல்களின்படி, நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் முடிந்தவரை டெல்லியில் கூட்டங்களை நடத்தவும், ஆய்வுப் பயணங்களைத் தவிர்க்கவும் முறைசாரா முறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எரிபொருளைச் சேமிக்கவும், உறுப்பினர்கள் டெல்லிக்கு பயணம் செய்வதால் ஏற்படும் செலவைத் தவிர்க்கவும், நாடாளுமன்றக் குழு கூட்டங்களை காணொளிக் காட்சி மூலம் நடத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற அறிவுறுத்தல், கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் நாடாளுமன்றக் குழு கூட்டங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் அவை சாத்தியமற்றவை எனக் கருதப்பட்டன. ஏனெனில், பல ரகசியத் தகவல்களை நாடாளுமன்றக் குழுக்கள் காணொளிக் கூட்டங்களில் விவாதிப்பது பாதுகாப்பற்றதாக இருக்கும் என கருதப்பட்டது நினைவுகூரத்தக்கது.