புதுடெல்லி: “BRICS நாடுகளின் ஆற்றல்களை உலக நலனுக்காக ஒன்றிணைக்க இந்தியா முயலும்” என வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமையை இந்தியா ஏற்க உள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் லோகோ வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘மகர சங்கராந்திக்கு முன்பாக இன்று நாம் கூடி இருக்கிறோம். லோஹ்ரி, மாக் பிஹு, பொங்கல் என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த திருவிழா, உத்தராயணம் என்று அழைக்கப்படும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தைக் கொண்டாடுகிறது.
இந்த மங்களகரமான தருணத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திருவிழாக்கள் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்துவது போலவே, இந்தியாவின் BRICS தலைமைப் பொறுப்பும், உலக நலனுக்காக BRICS நாடுகளின் ஆற்றல்களை ஒன்றிணைக்க முயலும்.
2026-ல் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை ஏற்க இந்தியா தயாராகும் இந்த நேரத்தில், இந்த அமைப்பின் பயணத்தில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். 2026-ல் பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இந்த காலகட்டத்தில் அது வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க தளமாக சீராக வளர்ந்துள்ளது. மாறி வரும் உலக யதார்த்தங்களுக்கு ஏற்ப BRICS அமைப்பு தனது நிகழ்ச்சி நிரல்களையும் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையையும் விரிவுபடுத்தியுள்ளது. மேலும், மக்களை மையப்படுத்திய வளர்ச்சி, உரையாடல், ஒத்துழைப்பு ஆகியவற்றை ஊக்கப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
தற்போதைய உலகளாவிய சூழல், சிக்கலான மற்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய சவால்கள், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள், சிக்கலான பொருளாதார நிலப்பரப்புகள், காலநிலை தொடர்பான அபாயங்கள், தொழில்நுட்ப மாற்றங்கள், நீடித்த வளர்ச்சி இடைவெளிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை பிராந்தியங்கள் முழுவதும் உள்ள நாடுகளை பாதிக்கிறது.
இந்த சூழலில் BRICS ஒரு முக்கியமான மன்றமாகத் திகழ்கிறது. இது வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளில் உள்ள தேசிய முன்னுரிமைகளைக் கணக்கில் கொண்டு நடைமுறைத் தீர்வுகளை வழங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலால் உத்வேகம் பெற்று, மனிதநேயமே முதன்மை, மக்கள் மைய அணுகுமுறை ஆகியவற்றுடன் இந்தியா தனது தலைமைப் பொறுப்பை அணுகுகிறது.
BRICS தனது உறுப்பினர்களின் தனித்துவமான அடையாளங்களை மதிக்கும் அதேவேளையில், அவர்களின் கூட்டுப் பங்களிப்புகளில் இருந்து வலிமையைப் பெறுகிறது. இன்று தொடங்கப்பட்டுள்ள பிரிக்ஸ் இந்தியா இணையதளம், இந்தியாவின் தலைமைத்துவத்தின்போது ஒரு பொதுவான தளமாகச் செயல்படும். கூட்டங்கள், முன்முயற்சிகள், முடிவுகள் குறித்த தகவல்களை வழங்கும். மேலும், அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் ஈடுபாட்டை எளிதாக்கும். இது தகவல்களை சரியான நேரத்தில் பரப்ப உதவும்’’ என தெரிவித்தார்.