புதுடெல்லி: டெல்லியின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ‘ரெட் அலர்ட்' விடுத்திருந்த நிலையில், அங்கு நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியது.
தலைநகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 60-80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பாலம் மற்றும் துவாரகா பகுதிகளில் நேற்று பிற்பகல் 2:30 மணி நிலவரப்படி, மணிக்கு 92 கி.மீ. வேகம் வரை காற்று வீசியது.
முன்னதாக, டெல்லியின் பல இடங்களில் இடி, மின்னலுடன்லேசான மழை பெய்யக்கூடும் என ‘ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டிருந்தது. டெல்லியை ஒட்டியுள்ள ஃபதேஹாபாத், ஜிந்த், சோனிபட், ரோஹ்தக் உள்ளிட்ட பகுதிகளிலும் புழுதிப்புயலைத் தொடர்ந்து லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நேற்று காலையிலும் டெல்லியில் லேசான மழை பெய்தது. இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் மேற்கத்திய இடையூறு காரணமாக இந்த மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த அமைப்பின் தாக்கம் குறையத் தொடங்குவதால், தலைநகரில் செவ்வாய்க்கிழமை முதல் படிப்படியாக வெப்பநிலை உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தீவிர மேற்கத்திய இடையூறுகளின் விளைவாக, வடமேற்கு இந்தியாவில் ஜூன் 19 வரை மழை தொடரும் என ஐஎம்டி தெரிவித்துள்ளது. இந்த மழை கடுமையான வெப்ப அலையிலிருந்து மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.