புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விவகாரத்தில், அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிபணிந்துவிட்டார்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘பிரதமர் மோடி கலக்கம் அடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முடங்கி இருந்த இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் மோடி நேற்றிரவு கையெழுத்து இட்டுவிட்டார். அவர் மீது கடும் அழுத்தம் உள்ளது. அவரது இமேஜ் சேதமடையலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார். பொதுமக்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் சமரசம் செய்து கொண்டதன் மூலம் பிரதமர் மோடி, மக்களின் கடின உழைப்பை விற்றுவிட்டார். நாட்டை அவர் விற்றுவிட்டார். நரேந்திர மோடி அச்சமடைந்துள்ளார். ஏனெனில், அவரது பிம்பத்தை வடிவமைத்தவர்களே இப்போது அதை உடைக்கிறார்கள்’’ என கூறினார்.
பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, ‘‘அமெரிக்காவில் அதானி மீது ஒரு வழக்கு உள்ளது. உண்மையில் அது மோடி மீதான வழக்கு. எப்ஸ்டீன் கோப்புகளில் இன்னும் வெளியிடப்படாத கோப்புகள் உள்ளன. இவை இரண்டும் அழுத்தத்துக்கான காரணிகள். இதை நாடு புரிந்து கொள்ள வேண்டும்’’ என தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி சசி தரூர், ‘‘அந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் விளக்கம் மட்டும்தான் கேட்கின்றன. அந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் சமூக ஊடக பதிவும், பிரதமர் மோடியின் சமூக ஊடக பதிவும்தான் நம்மிடம் உள்ளன. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இவை மட்டும் போதுமானதாக இருக்க முடியுமா?
இந்த ஒப்பந்தத்தில் இந்திய விவசாயம் தொடர்பாக என்ன இருக்கிறது என்பதை அரசு மக்களுக்கு விளக்க வேண்டும். இந்தியா அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள இறக்குமதிகளை மேற்கொள்ளும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். நமது மொத்த இறக்குமதியே 700 பில்லியன் டாலர்தான். அப்படியானால், நாம் மற்ற நாடுகளில் இருந்து மேற்கொள்ளும் இறக்குமதிகளை நிறுத்தப் போகிறோமா? இந்த ஒப்பந்தம் தொடர்பான செய்தி நல்லதாக இருந்தால் நாங்கள் கொண்டாட விரும்புகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, ‘‘அமெரிக்க அதிபர் நேற்று இரவு வரிகள் குறித்து சமூக ஊடக பதிவு ஒன்றை வெளியிட்டு, அதில் பிரதமர் மோடியை தனது உண்மையான நண்பர் என குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்தும் வர்த்தகம் குறித்தும் குறிப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் தானாக முன்வந்து ஓர் அறிக்கையை வெளியிடும். மேலும், இது குறித்து விவாதமும் நடத்தும்’’ என்று தெரிவித்தார்.