புதுடெல்லி: பல ஆண்டுகளாக, மத்திய அரசின் இந்திய தொல்லியல் ஆய்வு (ஏஎஸ்ஐ) நிறுவனம் இந்தியாவின் பண்டைய வரலாறு மற்றும் மகாபாரதம் குறித்த தடயங்களைக் கண்டறியும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக ஏஎஸ்ஐ பல அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.
மகாபாரத பாண்டவர்களின் குருவாக இருந்தவர் துரோணாச்சாரியார். இவரது ஆசிரமம் குறித்த மர்மத்தை அவிழ்க்க, உத்தராகண்டில் அகழ்வாராய்ச்சி மீண்டும் தொடங்கி உள்ளது. இது காசிபூர் மாவட்டம் துரோணாசாகாரில் சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் நடைபெறுகிறது. இது இந்தியாவின் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணரவும், மகாபாரதம் மற்றும் ஷூங்கா மற்றும் குஷானர் ஆட்சிக் காலங்களின் வரலாற்றுத் தகவல்களைக் கண்டறியவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய அகழ்வாராய்ச்சிகளின் ஒரு பகுதியாக, துரோணாசாகரில் ஒரு தளம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான நாகரிகத்துக்கான தடயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இது, மகாபாரதம் மற்றும் குரு துரோணாச்சாரியாரின் ஆசிரமம் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதுகுறித்து, அங்கு ஆய்வு செய்யும் ஏஎஸ்ஐயின் டேராடூன் வட்டக் கண்காணிப்பு தொல்லியல் ஆய்வாளர் (பொறுப்பு) டாக்டர் மோகன் சந்திர ஜோஷி கூறும்போது, “துரோணசாகரில் முதன்முதலில் 1965-ல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, இங்கு பல கட்டுமானங்கள் கண்டறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து 1970-71-ல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், இந்த இடத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை வெளிப்படுத்தின.
இங்கு ‘பெயிண்டட் கிரே வேர்’ எனப்படும் மட்பாண்டங்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், பல அறிஞர்கள் இந்த இடத்தை மகாபாரத காலத்துடன் தொடர்புபடுத்துகின்றனர். தற்போது எங்களது முக்கிய நோக்கம், இயற்கையான மண் அடுக்கு வரைமுறையான அகழ்வாராய்ச்சியை மேற்கொள்வதாகும். இதன்மூலம், இந்த இடத்தின் முழுமையான கலாச்சார வரிசையைத் தீர்மானிக்கவும், அதன் தோற்றத்தைக் கண்டறியவும் முடியும்” என்றார்.