புதுடெல்லி: மேற்காசிய மோதலால் ஏற்பட்டுள்ள சவால்களை அரசியலாக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று நடைபெற்ற மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்த மார்ச் மாதம் உலகளவில் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது. கோவிட் காரணமாக உலகம் நீண்டகாலமாக பல பிரச்சினைகளைச் சந்தித்தது நம் அனைவருக்கும் நினைவிருக்கிறது. கரோனா நெருக்கடியைக் கடந்த பிறகு, உலகம் ஒரு புதிய முன்னேற்றப் பாதையில் செல்லும் என்று நாம் அனைவரும் எதிர்பார்த்தோம்.
ஆனால், உலகின் பல்வேறு பகுதிகளில் போர் மற்றும் மோதல் சூழ்நிலைகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. தற்போது நமது அண்டை நாடுகளில் ஒரு மாதமாக ஒரு கடுமையான போர் நடந்து கொண்டிருக்கிறது. நமது குடும்ப உறுப்பினர்களில் லட்சக்கணக்கானோர் இந்த வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர். குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். அங்குள்ள ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு அனைத்து விமாத உதவிகளையும் வழங்கி வரும் வளைகுடா நாடுகளுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது போர் நடந்து கொண்டிருக்கும் பிராந்தியம், நமது எரிசக்தி தேவைகளுக்கான ஒரு முக்கிய மையமாகும். இது பெட்ரோல், டீசல் தொடர்பாக ஒரு சர்வதேச நெருக்கடியை உருவாக்கி வருகிறது. நமது சர்வதேச உறவுகள், பல்வேறு நாடுகளிடம் இருந்து நாம் பெரும் ஆதரவு, கடந்த பத்தாண்டுகளில் நமது தேசம் கட்டமைத்துள்ள வலிமை ஆகியவை இந்த சவால்களை இந்தியா துணிச்சலுடன் எதிர்கொள்ள உதவியுள்ளது.
நிச்சயமாக இது ஒரு சவாலான காலகட்டம். இன்று மனதின் குரல் மூலம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவாலை வெல்ல வேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன். இந்த விஷயத்தை அரசியல்மயமாக்குபவர்கள், அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இது 140 கோடி குடிமக்களின் ;நலன்கள் தொடர்பான ஒரு விஷயம். இதில் சுயநல அரசியலுக்கு இடமில்லை.
எனவே, வதந்திகளைப் பரப்புபவர்கள், நாட்டுக்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றனர். நமது நாட்டு மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், வதந்திகளால் தவறாக வழிநடத்தப்படாமல் இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறேன். அரசாங்கம் வழங்கும் தொடர்ச்சியான தகவல்களை நம்பி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள். எப்பொழுதும்போலவே, நமது 140 கோடி மக்களின் வலிமையால் கடந்த கால நெருக்கடிகளை நாம் கடந்து வந்ததைப் போல இம்முறையும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெற்றி பெறுவோம் என்று நான் உறுதியா நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.