இந்தியா

‘நீட் தேர்வை மீண்டும் எழுதும் துணிவு இல்லை’ - உயிரை மாய்த்துக் கொண்ட ம.பி. மாணவி கடிதம்

மோகன் கணபதி

புதுடெல்லி: மீண்டும் நீட் தேர்வை எழுதும் துணிச்சல் தனக்கு இல்லை என்றும், தன்னை மன்னித்துவிடுமாறும் உருக்கமாக கடிதம் எழுதிவைத்து விட்டு மாணவி அகாங்ஷா சதுர்வேதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் மவுகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி அகாங்ஷா சதுர்வேதி, நாக்பூரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். கடந்த மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வை சிறப்பாக எழுதி உள்ளார். இது குறித்து அவர் தனது பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21-ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை கடந்த மே 12ம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளான அகாங்ஷா சதுர்வேதி மிகுந்த விரக்தியில் இருந்து வந்துள்ளார். மே 20-ம் தேதி நாக்பூரில் உள்ள தனது வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அன்று மதியம் குடும்பத்தினர் மதிய உணவு சாப்பிட அழைத்தபோது தனக்கு பசி இல்லை என்றும் பிறகு சாப்பிடுவதாகவும் கூறிவிட்டு தனது அறைக்குச் சென்றுள்ளார். அந்த அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை அவரது குடும்பத்தினர் பிற்பகல் 3 மணி அளவில் பார்த்துள்ளனர். ஆனால், அப்போது தற்கொலைக்கான கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சில நாட்களுக்குப் பிறகு மாணவியின் பாட புத்தகங்கள் மற்றும் பாடக் குறிப்புகளை பார்த்தபோது அதில் கையால் எழுதப்பட்ட ஒரு கடிதம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதில், ‘அம்மா, அப்பா... நான் படித்து மருத்துவர் ஆவேன் என்று என் மீது நம்பிக்கை வைத்திருந்தீர்கள். ஆனால், மறுதேர்வு எழுதுவதற்கான துணிவு எனக்கு இல்லை. முதல் தேர்வில் நான் நல்ல மதிப்பெண்களைப் பெற இருந்தேன். ஆனால், மீண்டும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவேன் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. என்னை மன்னியுங்கள். உங்கள் இருவரின் எல்லாவற்றையும் நான் பாழாக்கிவிட்டேன்’ என்று மாணவி அகாங்ஷா சதுர்வேதி எழுதியுள்ளார்.

இதையடுத்து இந்த கடிதத்தை ஜூன் 1-ம் தேதி அம்பாசாரி காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் ஒப்படைத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் துணை ஆணையர் நித்யானந்த் ஜா, “குடும்பத்தினருடன் நாக்பூரில் வசித்து வந்தபோதுதான் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது புத்தகங்களை ஆராய்ந்தபோது அந்த கடிதம் கிடைத்துள்ளது. அது காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

SCROLL FOR NEXT