திமுக எம்.பி. வில்சன்
புதுடெல்லி: திமுக எம்.பி.வில்சன் மாநிலங்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாவது: யுபிஎஸ்சி-யின் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது.
இதனால் தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த திறமையான தேர்வர்கள் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்படுகிறார்கள். இதனால் அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே தமிழ் உட்பட அனைத்து 22 மொழிகளிலும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். யுபிஎஸ்சி தேர்வுக்கான மதிப்பெண் வழங்கும் முறையில் ஆங்கிலத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும், நேர்காணலில் மாணவர்களுக்கு மிகக் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கிறது. ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இது மிகவும் பொருந்தும். மேலும், தேர்வு நடைமுறை முழுமையாக நிறைவடைய 15 மாதங்கள் ஆகின்றன. ஒரு மாணவர் தோல்வி அடைந்தால், அவருடைய முழு ஆண்டும் வீணாகி விடுகிறது. எனவே, யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும். இவ்வாறு எம்.பி. வில்சன் மாநிலங்களவையில் பேசினார்.
மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் சமீபத்தில் ஒரு கேள்விக்கு அளித்த பதிலில், “சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு பிறகு, அதற்கான தற்காலிக விடைக்குறிப்பை யுபிஎஸ்சி, தனது இணையதளத்தில் வெளியிடும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை, 2026-ம் ஆண்டு நடைபெறும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் இருந்து தொடங்கும்” என்றார்.