இந்தியா

கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் ப‌தவியேற்றார்: அமைச்சர்களாக 13 பேர் பதவியேற்பு

கார்கே, ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்பு

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் 25-வது முதல்வ‌ராக டி.கே.சிவகுமார் பெங்களூருவில் நேற்று மாலை பதவியேற்றார். அவருடன் துணை முதல்வர் பரமேஷ்வரும், அமைச்சர்களாக 12 மூத்த தலைவர்களும் பதவியேற்றனர். இந்த விழாவில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் சதீஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. முதல்வர் பதவிக்கு சித்தராமையாவுக்கும் டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்குவதென அதிகார பகிர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதத்துடன் சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் ஆனது. எனவே டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் தங்களின் தலைவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தியது. அதன்படி அவர் கடந்த 28ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து நடந்த காங்கிரஸ் சட்டப்பேரவை குழு கூட்டத்தில், அதன் தலைவராக டி.கே.சிவகுமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

குருவின் மீது ஆணை: பெங்களூருவில் உள்ள லோக் பவனில் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய முதல்வரின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, கேரள முதல்வர் வி.டி.சதீஷன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சல் முதல்வர் சுக்வீர் சிங் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

ஆளுநர் தாவர்சந்த் கெலாட் சரியாக 4.05 மணிக்கு டி.கே.சிவகுமாருக்கு முதல்வராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கையில் இந்திய அரசியலமைப்பு நூலை கையில் ஏந்தியவாறு, தனது குரு கங்காதர் அஜ்ஜையாவின் பெயரில் ஆணையிட்டு பதவியேற்றார். பின்னர் பூமியில் தலை வைத்து வணங்கினார்.

டி.கே.சிவகுமார் பதவியேற்பதற்கு முன்பு ஒக்கலிகா மடாதிபதிகள், தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோரிடம் ஆசி பெற்றார். தீவிர ஆன்மீகவாதியான தனது ஆஸ்தான ஜோதிடர் குறித்துக் கொடுத்த நேரத்திலே பதவியேற்றார். முதல்வராக பதவியேற்பதற்கு முன்பாக டி.கே.சிவகுமார் தனது தாய் கவுரம்மா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, மஜத தேசிய தலைவரும் முன்னாள் பிரமதருமான தேவகவுடா ஆகியோரை நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றார்.

கர்நாடகாவின் துணை முதல்வராக ஜி.பரமேஷ்வரா, அம்பேத்கர் மீது ஆணையிட்டு பதவியேற்றார். பட்டியலினத்தை சேர்ந்த இவர் கடந்த 2018ம் ஆண்டு குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் துணை முதல்வராக பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜார்கிஹோளி, யு.டி.காதர், ஈஸ்வர் கன்ட்ரே, பைரத்தி சுரேஷ், ஷரண் பிரகாஷ் பாட்டீல், கிருஷ்ண பைரே கவுடா ஆகியோரும் பதவியேற்றனர்.

பின்னர் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திராவும் பதவியேற்றனர். புதியதாக பொறுப்பேற்ற 12 அமைச்சர்களில் யதீந்திராவையும், யு.டி.காதரையும் தவிர மற்ற 10 பேரும் முந்தைய சித்தராமையாவின் அரசில் அமைச்சர்களாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

புதியதாக பொறுப்பேற்ற முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் ராகுல் காந்தி, கார்கே, சித்தராமையாவிடம் வாழ்த்து பெற்றனர். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் டி.கே. சிவகுமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு டி.கே.சிவகுமார் நன்றி தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போட்டி போடுவதால், மேலிடத்துடன் ஆலோசனை நடத்திய பின்னர், அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய டி.கே.சிவகுமார் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT