புதுடெல்லி: ஷரீயா நீதிமன்றங்களின் விவாகரத்து உத்தரவு சட்டப்படி செல்லாது என்றும் திருமண நிலையை மாற்ற தனியார் மற்றும் மத அமைப்புகளுக்கு உரிமை கிடையாது என்றும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் திக்கராபாரா பகுதியைச் சேர்ந்த நிரோஷ் அப்பாஸி எனும் முஸ்லிம் பெண்ணின் கணவர் கடந்த 2015-ல் இறந்து விட்டார். இதையடுத்து, ஜுலை 18, 2020-ல் முகம்மது ஆபீத் கானை மறுமணம் செய்தார். நிரோஷின் முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகளை ஏற்பதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.
இதனால், மோதல் முற்றியதையடுத்து நிரோஷ், தன் மாமியார் வீட்டாரால் கொடுமைக்கு ஆளானார். இதையடுத்து, நிரோஷ், 2021 அக்.7-ல் ராய்பூர் மாவட்ட எஸ்எஸ்பியிடம் புகார் செய்தார். இப்புகாரை ஏற்று கணவர் ஆபீத் கான் மற்றும் அவரது வீட்டார் மீது வழக்குப் பதிவானது. இதனிடையே, ஆபீத் கான் முஸ்லிம்களின் ஷரீயத் முறைப்படி நிரோஷை முத்தலாக் கூறி விவாகரத்து செய்து விட்டதாகக் கூறியுள்ளார். ராய்பூரின் பிரபல இதார் எ ஷரீயா எனும் இஸ்லாமிய அமைப்பிடம் இந்த விவகாரம் சென்றது. இதில், ஆபீத் கான் அளித்த விவாகரத்து முறையானதே என தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, ராய்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் நிரோஷ். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அம்தேந்திரா கிஷோர் பிரசாத் தீர்ப்பளித்தார். இதேபோன்ற ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிபதி, தனியார் மற்றும் மத அமைப்புகள் சட்டப்படியான எந்த ஒரு திருமணத்தின் நிலையின் உரிமையையும் மாற்ற முடியாது என உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,‘‘ஷரீயா நீதிமன்றங் களின் விவாகரத்து உத்தரவு சட்டப்படி செல்லாது. சுயமாக இயங்கும் ஷரீயா உள்ளிட்ட எந்த வொரு தனியார் மத அமைப்புக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. மதம் என்பது தனிப்பட்ட நம்பிக்கைக்குரிய விஷயமாக இருந்தாலும், சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கைப்பற்ற எந்தவொரு முறைசாரா மத அமைப்பையும் அனுமதிக்க முடியாது. நாட்டின் அரசியலமைப்பில் எந்தவொரு மாற்று நீதி அமைப்புக்கும் இடமில்லை’’ என குறிப்பிட்டுள்ளார்.
எனினும், முஸ்லிம்களின் விவாகரத்து முறையில் முக்கியமான ‘தலாக்-ஏ-ஹசன்' மீதான அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மை குறித்த முக்கிய விவகாரம் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. எனவே, அது குறித்து இந்த வழக்கின் தீர்ப்பில் எந்தவிதக் குறிப்புகளும் அளிக்க நீதிமன்றம் முற்படவில்லை. வரலாற்று சிறப்பு மிக்கதாகக் கருதப்படும் இந்தத் தீர்ப்பினால், குடும்பம் மற்றும் திருமண விவகாரங்களில் முறைசாரா பஞ்சாயத்துகள் அல்லது மத அமைப்புகள் தலையிட சட்டப்படி உரிமை இல்லை என்பது தெளிவாகி உள்ளது.