திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்ட ஆட்சியர் குழந்தையை பெற்றெடுத்த 6 நாட்களில் பணிக்கு திரும்பினார். எனினும், பின்னர் 2 மாத விடுப்பில் சென்றுள்ளார்.
கேரளாவின் வயநாடு ஆட்சியர் மேகாஸ்ரீ. 2017-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அவர், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி தனது அலுவலக பணிகளை முடித்தார். பிறகு அவர் வீட்டுக்குச் செல்வதற்குப் பதிலாக நேராக மருத்துவமனையில் சேர்ந்து கொண்டார். மறுநாள், மேகாஸ்ரீ தனது 3-வது பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அடுத்த 6 நாட்களுக்குப் பிறகு அவர் செப்டம்பர் 1-ம் தேதி மீண்டும் பணிக்குத் திரும்பினார். கடந்த 15 நாட்களாக பணியாற்றிய அவர், 2 மாத கால மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளார். இதையடுத்து, நேற்று அவர் தனது பொறுப்பை தனக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரி செல்சாசினியிடம் ஒப்படைத்தார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மேகாஸ்ரீ தனது பச்சிளம் குழந்தை உட்பட 3 பெண் குழந்தைகளையும் அலுவலகத்துக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரு நெகிழ்ச்சியான தருணத்தைக் கண்டது. அவரது கடமை உணர்வு பாராட்டப்பட்டாலும், மேகாஸ்ரீ தனது முடிவை பெரிதுபடுத்த விரும்பவில்லை.
இதுகுறித்து மேகாஸ்ரீ கூறும்போது, "பிரசவத்துக்குப் பிறகும் மாவட்ட ஆட்சியரின் கடமைகளைத் தொடர்ந்து செய்வது தனிப்பட்ட முடிவு. மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. இந்த முடிவு அவரவர் உடல்நிலை மற்றும் சூழ்நிலையைப் பொறுத்தது" என்றார். சமீபத்தில், மேகாஸ்ரீதான் வழக்கமாக நடத்தி வந்த "குட் மார்னிங் கலெக்டர்" திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களுடன் ஆன்லைன் மூலமாகவும் உரையாடினார்.