அமராவதி: ஆந்திராவின், கோனசீமா டாக்டர் அம்பேத்கர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை (சங்கராந்தி) பிரம்மாண்டமாக கொண்டாடுவது வழக்கம். இங்கு சேவல் பந்தயங்கள், படகு சவாரி, பட்டம் விடும் போட்டிகள் 4 நாட்கள் நடைபெறும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11-ம் தேதியே நிகழ்ச்சிகள் தொடங்கப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக ஆத்திரேய புரம் புலிதிண்டி ஏரியில் நேற்று படகு போட்டிக்கான வெள்ளோட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் கோனசீமா மாவட்ட ஆட்சியர் மஹேஷ்குமார் வெள்ளோட்டத்தை மேற்பார்வையிட்டார்.
அப்போது மஹேஷ்குமாரும் ஒரு படகில் பாதுகாப்பு கவசம் அணிந்து துடுப்புகளை போட்டபடி சவாரி செய்தார். யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மாவட்ட ஆட்சியர் மஹேஷ்குமார் சென்ற படகு ஏரியில் கவிழ்ந்தது. இதில் மாவட்ட ஆட்சியரும் மற்றொருவரும் ஏரியில் விழுந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் காப்பாற்றினர்.