புதுடெல்லி: நடப்பு கல்வியாண்டின் இடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மும்மொழி திட்டம் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதை நிறுத்திவைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சங் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினரும், கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவருமான திக்விஜய் சிங் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “நடப்பு கல்வியாண்டின் இடையில் மும்மொழி திட்டத்தை கட்டாயமாக்குவதை எதிர்த்து சிபிஎஸ்இ 9ம் வகுப்பு பயலும் மாணவர்களின் பெற்றோர்கள் குழுவிடம் இருந்து கோரிக்கை மனு வந்துள்ளது. அந்த மனுவை இத்துடன் இணைத்து அனுப்புகிறேன்.
அந்த மனுவை ஆய்வு செய்ததில், அதில் எழுப்பப்பட்டுள்ள கவலைகள் நியாயமானவை என்றும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை என்றும் நான் கருதுகிறேன். போதுமான ஆசிரியர்கள், பாடப்புத்தகங்கள், மாற்றத்துக்கான கால அவகாசம் இன்றி கல்வியாண்டின் இடையில் திடீரென இத்திட்டத்தை அமல்படுத்துவது கடுமையான குழப்பத்தை ஏற்படுத்தும். இது நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களை பாதித்த சிபிஎஸ்இ-யின் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (ஓஎஸ்எம்) முறையை அவசர அவசரமாக அமல்படுத்தியபோது ஏற்பட்ட குழப்பத்தைப் போன்ற ஒரு சூழலை ஏற்படுத்தக்கூடும்.
மொழிகளுக்கான பாடப்புத்தகங்களை என்சிஇஆர்டி வெளியிடும் வரை பள்ளிகள் மொழிகள் தொடர்பான தற்போதைய பாடத்திட்ட முறையையே பின்பற்ற வேண்டும் என்ற பாடத்திட்டக் குழுவின் பரிந்துரையை கடந்த டிசம்பர் 2025ல் சிபிஎஸ்இ நிர்வாகக் குழு அங்கீகரித்திருந்தது. தனது சொந்த நிர்வாகக் குழுவின் முடிவுக்கு மாறாக 2026 ஜூலை 1 முதல் 9ம் வகுப்பில் மூன்றாம் மொழி பயிற்சியை அமல்படுத்துமாறு சிபிஎஸ்இ 15ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. என்சிஇஆர்டி இதுவரை மொழிகளுக்கான தரப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களை வெளியிடாத நிலையில் அதற்குப் பதிலாக என்சிஇஆர்டியின் 6ம் வகுப்பு பாடப்புத்தகங்களைப் பயன்படுத்துமாறு சிபிஎஸ்இ பரிந்துரைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளின் கல்வி திட்டமிடலை பாதிக்கும் வகையில் சிபிஎஸ்இ தனது நிர்வாகக் குழுவின் முடிவை ஏன் வெளிப்படையாக மாற்றியமைத்தது என்பது தெளிவாக இல்லை.
இந்தி பேசப்படாத தென்னிந்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தற்போதைய 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த கொள்கை அமலாக்கத்தை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும் என்பதே எனது பணிவான பரிந்துரை. இந்த விவகாரம் நீதிமன்ற பரிசீலனையில் உள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜூலை 15 அன்றுதான் வர உள்ளது. பள்ளிகள் மூன்றாவது மொழி தொடர்பான அறிவுறுத்தலை ஜூலை 1 முதல் அமல்படுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதால் இதை எழுதுகிறேன்.
லட்சக்கணக்கான மணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் நீங்கள் அவசரமான, கனிவான கவனத்தை செலுத்துவீர்கள் என்று நான் மனதார நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.