புதுடெல்லி: டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறுவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பிரிக்ஸ் மாநாடு செப்டம்பர் 12-ம் தேதி (இன்று) முதல் டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் அதிபர் பெசஸ்கியான், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய உறுப்பு நாட்டு தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டுக்காக டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மாநாடு தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறும்போது, “கடந்த இரண்டு அல்லது மூன்று பிரிக்ஸ் மாநாடுகளால் நாட்டுக்கு எந்தவொரு தெளிவான அல்லது குறிப்பிடத்தக்க பலன்களும் கிடைக்கவில்லை” என்றார்.
இதனிடையே கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் கூறும்போது, “பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் நடப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிரிக்ஸ் அமைப்பில் உள்ள 11 உறுப்பு நாடுகள் உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியையும், உலகளாவிய ஜிடிபி-யில் சுமார் 41 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.
எனவே பிரிக்ஸ் அமைப்பு, வளரும் நாடுகளுக்கு மிக முக்கியமான ஒரு சர்வதேச தளமாகும். பல நாட்டுத் தலைவர்கள் டெல்லிக்கு வருகை தருவது இந்தியாவின் வெளியுறவு மற்றும் தூதரக பலத்தைக் காட்டுகிறது. இம்மாநாட்டை இந்தியா நடத்துவது நாட்டுக்குப் பெருமை” என்றார்.
இந்நிலையில் பிரிக்ஸ் மாநாடு குறித்து காங்கிரஸ் தலைவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி விமர்சனம் செய்துள்ளார்.
அவர் கூறும்போது, “காங்கிரஸ் கட்சி நாட்டின் சர்வதேச வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கண்டு எப்போதும் எதிர்மறையான மனநிலையையே வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சிக்காரர்களே தங்களது கட்சியை அம்பலப்படுத்திக் கொள்கின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டை அவர்கள் எதிர்க்கின்றனர்” என்றார்.