இந்தியா

ஈரான் போர் பதற்றம் தணிய பேச்சுவார்த்தையே சிறந்த தீர்வு: இந்தியா நிலைப்பாடு

மோகன் கணபதி

புதுடெல்லி: ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர் விவகாரத்தில், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே சரியான தீர்வைத் தரும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பிப். 28-ம் தேதி தாக்குதலைத் தொடங்கிய நிலையில், இரு நாடுகளுக்கு எதிராக ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடும் ஏற்றத்தை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு ஆசியாவின் புவிசார் நிலைமை காரணமாக இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு மிகப் பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து விதி எண் 176-ன் கீழ் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

          

எனினும், இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் தனது உரையில் கூறியதாவது: மேற்கு ஆசியாவின் நிலை குறித்த இந்தியாவின் கவலையை வெளிப்படுத்தும் விதமாக அரசு சார்பில் ஏற்கெனவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தி இருக்கிறோம். பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜிய ரீதியிலான அணுகுமுறை மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டு வரும் நிலைமைகளை பிரதமர் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார். சரியான விதத்தில் பதிலளிக்க ஏதுவாக அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த தொடர்ச்சியான மோதல் இந்தியாவுக்கு மிகவும் கவலை அளிக்கிறது. நாம் ஓர் அண்டை நாடு. மேற்கு ஆசியாவில் ஸ்திரத்தன்மை நீடிப்பதில் நமக்கு வெளிப்படையான பங்கு இருக்கிறது.

வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். ஈரானிலும் படிப்பு மற்றும் வேலை தொடர்பாக சில ஆயிரம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். இந்தப் பகுதி நமது எரிசக்திப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியம். இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கும் பல நிறுவனங்கள் இங்கு உள்ளன. விநியோகச் சங்கிலி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும், ஸ்திரத்தன்மை இல்லாத சூழலும் மிகவும் முக்கியப் பிரச்சினைகள்.

இந்த மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை கணிசமாக மோசமடைந்துள்ளது. இது மற்ற நாடுகளுக்கும் பரவி, அழிவை அதிகரிக்கிறது. இயல்பு வாழ்க்கையும் செயல்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மோதல் காரணமாக நாம் இரண்டு கப்பல் பணியாளர்களை இழந்துவிட்டோம். ஒருவரை காணவில்லை.

தெஹ்ரானில் உள்ள பல இந்திய மாணவர்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்வதற்கு இந்திய தூதரகம் வசதி செய்துள்ளது. ஈரானில் உள்ள இந்தியர்கள் அர்மீனியா வழியாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. தெஹ்ரானில் உள்ள நமது தூதரகம் முழுமையாக செயல்பட்டு வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் அங்குள்ள இந்திய சமூகத்துக்கு ஆதரவாக இருப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என தெரிவித்தார்.

மக்களவை ஒத்திவைப்பு: மேற்கு ஆசியாவின் தற்போதைய போர்ச்சூழல் குறித்தும் அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 28-ம் தேதி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது.

ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி நரவனேவின் வெளியிடப்படாத நினைவுக் குறிப்பு புத்தகத்தில் இந்தியா - சீனா இடையேயான கல்வாண் மோதல் தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் விவகாரம், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் கோப்புகளில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம் பெற்றிருந்த விவகாரம் ஆகிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பின.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மக்களவை தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேநேரத்தில்,மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதில் அளித்தார். இரு அவைகளும் பிப். 13-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டம் இன்று தொடங்கியது.

SCROLL FOR NEXT