அமர்நாத் குகைக் கோயில்

 
இந்தியா

அமர்நாத் புனித யாத்திரை: 8,815 பக்தர்கள் புறப்பட்டனர்

செய்திப்பிரிவு

ஜம்மு: தெற்கு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,880 மீட்டர் உயரத்தில் உள்ள இக்கோயில் இந்துக்களின் புனித தலமாக விளங்குகிறது.

இங்கு இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை பாரம்பரிய பஹல்காம் பாதை மற்றும் குறுகிய பல்தால் பாதை வழியாக கடந்த 3ம் தேதி தொடங்கியது. 57 நாட்கள் நீடிக்கும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 28ம் தேதி நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் யாத்திரையின் முதல் நான்கு நாட்களுக்குள் குகைக் கோயிலில் வழிபட்ட பக்தர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்தை தாண்டியது. நேற்று 1 லட்சத்தை எட்டியது. இந்நிலையில் இந்த ஆண்டின் மிகப்பெரிய குழுவாக 8,815 பக்தர்கள் நேற்று ஜம்முவில் உள்ள பகவதி நகர் முகாமில் இருந்து 363 வாகனங்களில் புறப்பட்டனர்.

இக்குழுவில் 5,831 ஆண்கள், 2,193 பெண்கள், 31 குழந்தைகள், 598 சாதுக்கள், 131 பெண் சாதுக்கள் மற்றும் 31 வெளிநாட்டுப் பிரஜைகள் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் 181 வாகனங்களில் பயணம் செய்த 3,989 பக்தர்கள், கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பல்தால் முகாமை நோக்கியும், 182 வாகனங்களில் புறப்பட்ட 4,826 பக்தர்கள் பஹல்காம் முகாம் நோக்கியும் சென்றனர்.

ஜம்முவில் கடந்த 2ம் தேதி யாத்திரை தொடங்கியதில் இருந்து இங்குள்ள பகவதி நகர் யாத்ரி நிவாஸில் இருந்து புறப்பட்ட பக்தர்கள் எண்ணிக்கை 34,829 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 6,721 பக்தர்கள் பயணம் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை இந்த புதிய குழு முறியடித்துள்ளது.

இந்நிலையில் ஜூலை 9 வரை அனைத்து இடங்களும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால், பதிவு செய்யாத பக்தர்கள் தங்கள் பயணத்தை சில நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT