கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள தாஹேர்பூர் ஹெலிபேடில் பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர் இன்று (டிச.20) அப்பகுதியில் நிலவிய அடர்ந்த மூடுபனியால் ஏற்பட்ட காட்சித் தெளிவின்மை காரணமாக தரையிறங்க முடியாமல் கொல்கத்தாவுக்கு திரும்பியது.
இன்று காலையில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தாஹேர்பூர் ஹெலிபேட் தளத்தின் மீது சிறிது நேரம் வட்டமிட்ட பிறகு, யூ-டர்ன் அடித்து கொல்கத்தா விமான நிலையத்துக்கே திரும்பியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பேரணி நடைபெறும் தாஹேர்பூருக்கு சாலை மார்க்கமாகச் செல்வாரா அல்லது வானிலை சீரடையும் வரை காத்திருந்து, வான்வழி மார்க்கமாகவே செல்வாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று அந்த அதிகாரிகள் கூறினர்.
முன்னதாக, இன்று காலை 10.40 மணியளவில் பிரதமர் மோடி கொல்கத்தா வந்தடைந்தார். அங்கிருந்து நதியா மாவட்டத்தில் உள்ள தாஹேர்பூருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். தாஹேர்பூரில் அவர் மேற்கு வங்கத்தில் நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியிலும், அதைத் தொடர்ந்து 'பரிவர்த்தன் சங்கல்ப் சபா' என்ற பெயரில் நடைபெறும் பாஜகவின் அரசியல் பேரணியிலும் உரையாற்ற உள்ளார்.