புது டெல்லி: டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து இரண்டும் பாதிக்கப்பட்டன. இன்று காலை (ஞாயிறு) நிலவரப்படி டெல்லி விமான நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இன்றும் கடும் பனி மூட்டம் நிலவியதால், எதிரில் வரக்கூடிய விமானங்கள் தெரியாத நிலை உருவாகி பல பகுதிகளில் சாலைப் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் வடக்கு ரயில்வேயால் இயக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட ரயில்களும் தாமதமாகியுள்ளன.
இதுகுறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், “வட இந்தியாவின் சில பகுதிகளில் நிலவும் பனிமூட்டம் காட்சி தெளிவின்மையை உருவாக்குகிறது. இது பல விமான நிலையங்களில் விமானச் செயல்பாடுகளில் தாமதங்கள் அல்லது மாற்றங்களுக்கு வழிவகுக்கும். எனவே, பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களிடமிருந்து அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் விமானப் பயணத் தகவல்களைச் சரிபார்க்கவும், விமான நிலையப் பயணம் மற்றும் நடைமுறைகளுக்குக் கூடுதல் நேரத்தை ஒதுக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட பயணிகளுக்கான ஆலோசனையில், "டெல்லி விமான நிலையத்தின் செயல்பாடுகள் இயல்பாகவே தொடர்கின்றன. புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணைகளுக்கு, உங்கள் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அதிகாரப்பூர்வ விமான நிலைய வலைத்தளத்தைப் பார்வையிடவும். அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பான மற்றும் இனிமையான பயணத்தை மேற்கொள்ள நாங்கள் வாழ்த்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவல்களின்படி, டெல்லியில் இன்று காலை 7 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு(AQI) 390 ஆகப் பதிவு செய்யப்பட்டது, இது 'மிகவும் மோசமான' பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.