பிரதமர் மோடி.
கொல்கத்தா: “மேற்கு வங்கத்தின் ஃபால்டா சட்டப்பேரவை தொகுதிக்கான மறுதேர்தலில் ஜனநாயகம் வென்றது” என்று பாஜக வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஃபால்டா மக்கள் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது, அச்சுறுத்தல் தோல்வியடைந்துள்ளது. ஃபால்டாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தேபாங்ஷு பாண்டியாவுக்கு எனது வாழ்த்துகள்.
மேற்கு வங்க மக்கள் பாரதிய ஜனதா கட்சியின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு இது ஒரு சான்றாகும். மேற்கு வங்க அரசு பல்வேறு துறைகளில் மேற்கொண்டு வரும் சிறப்பான பணிகளை மக்கள் நேரடியாகக் கண்டு வருகின்றனர்; அதனால்தான் அவர்கள் மீண்டும் ஒருமுறை நமக்குத் தங்கள் ஆசியை வழங்கியுள்ளனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த அனைத்து பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் ஆற்றியுள்ள சிறப்பான பணிகளுக்காக அவர்களுக்கு எனது வாழ்த்துகள். எதிர்காலத்திலும், மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஃபால்டா மறுதேர்தல்: மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்.23, 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 29-ம் தேதி ஃபால்டா தொகுதியில் வாக்குப்பதிவின்போது முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், ஃபால்டா தொகுதியின் 285 வாக்குச் சாவடிகளிலும் மே 21-ம் தேதி மறுதேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது.
இதர 293 தொகுதிகளுக்கான முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி 9-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். இந்த சூழலில், தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக ஃபால்டா தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் கடந்த 19-ம் தேதி அறிவித்தார்.
ஏற்கெனவே அறிவித்தபடி ஃபால்டா தொகுதியில் கடந்த 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 86.71 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே பாஜக வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா முன்னிலையில் இருந்தார். இறுதியில் 1,49,666 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றார்.
மார்க்சிஸ்ட் வேட்பாளர் சாம்பு நாத் குர்மிக்கு 40,645 வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸ் வேட்பாளர் அப்துர் ரசாக் மொல்லா 10,084 வாக்குகளைப் பெற்றார். போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த திரிணமூல் வேட்பாளர் ஜஹாங்கீர் கானுக்கு 7,783 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஃபால்டா தொகுதியில் 1,09,021 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா அபார வெற்றியைப் பெற்றிருக்கிறார்.