இந்தியா

டெல்லி | போலீஸாரின் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்

குற்றப் பிரிவினர் விசாரணை

வேட்டையன்

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நேற்று (அக்.3) போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸாரால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக 3 பெண் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறையில் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் புகார் அளித்துள்ளனர். இதனை குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் உதவி ஆணையர் ஒருவரால், தான் பாலியல் ரீதியாக தாக்குதலுக்கு ஆளானதாக பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது சம்பவ இடத்தில் பெண் போலீஸார் யாரும் பணியில் இல்லை. அது குறித்து உதவி ஆணையர் விவேக் பகத் இடம் கேட்டேன். அதையடுத்து என் மீது பாலியல் ரீதியாக தாக்குதல் மேற்கொண்டு அவர் என்னை பிடித்து தள்ளினார்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி மாவட்ட காவல் துறையிடம் பாலியல் சீண்டல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அது குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ஜந்தர் மந்தரில் போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கை சீர்படுத்த போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது இந்த சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு வந்துள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக புகார் தெரிவித்தவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும். அதையடுத்து இதில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT