புது டெல்லி: “நேற்று (ஜூலை 20) நடைபெற்ற போராட்டத்தின் போது, மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீஸார் கொடூரமான வன்முறையை கட்டவிழ்த்தனர்” என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லி போலீஸார் நேற்று குழந்தைகளை எவ்வளவு கொடூரமாகவும் வன்முறையுடனும் தாக்கினார்கள் என்பதை நாம் பார்த்தோம். 12 வயது சிறுமிகளின் தலைகள் உடைக்கப்பட்டன. ஆண் போலீஸ் அதிகாரிகளே இதைச் செய்தனர். அவர்கள் டெல்லி போலீஸார் சீருடை அணிந்த குண்டர்கள்.
ஆர்.எம்.எல் மருத்துவமனையில் ஒரு சிறுமி இன்னும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். போலீஸார் அவளது கழுத்தில் தடியால் தாக்கினர்.
கழுத்தில் அடிபட்ட பிறகு கீழே விழுந்ததால் அவளது உடல்நிலை மோசமானது. அந்தச் சிறுமிக்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு டெல்லி போலீஸாரும் நரேந்திர மோடியின் அரசாங்கமுமே பொறுப்பு.
அவர்கள் எங்கள் பேரணியைத் தடுக்க விரும்பியிருந்தால், நீர்ப் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களைப் பயன்படுத்தியிருக்கலாம். இங்கே கூடியிருந்தவர்கள் 17-18 வயதுடைய குழந்தைகள் தான். நாங்கள் ஒரு மாதமாக இங்கே அமைதியாக அமர்ந்திருந்தோம். எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. நேற்று, டெல்லி போலீஸாரிடமிருந்தே முதல் தாக்குதல் தொடங்கியது. அவர்கள் தடிகளைப் பயன்படுத்தினர்.
நேற்று கற்கள் நிரம்பிய அந்த லாரிகள் எங்கிருந்து வந்தன?. டெல்லி காவல்துறை ஒரு பறவையைக் கூட இங்கே சிறகடிக்க விடுவதில்லை. எங்கள் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சோதிக்கப்படுகிறார்கள்; இத்தகைய சூழலில், ஜந்தர் மந்தர் பகுதியில் கற்கள் நிரம்பிய லாரிகள் எங்கிருந்து வந்தன?. இதற்கு டெல்லி காவல்துறை பதிலளிக்க வேண்டும்.
டெல்லி காவல்துறை இதை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தியது. நேற்று, காவல்துறையைச் சாராத சாதாரண உடையில் இருந்த சிலருக்கு அவர்கள் தடிகளை வழங்கினர். சமூக விரோதிகள் டெல்லி காவல்துறை சீருடையில் இருந்தனர். அவர்கள் தங்கள் பெயர் அட்டைகளை அகற்றிய பிறகு குழந்தைகளைத் தாக்கினர்.
சிஜேபி-யின் போராட்டங்கள் தொடரும், எங்கள் கட்சி பின்வாங்காது. மேலும் குழந்தைகள் காயமடைவதை நாங்கள் விரும்பவில்லை. உங்களுக்கு என்ன வேண்டும்?. இன்னும் பல குழந்தைகளின் தலைகள் உடைக்கப்பட வேண்டுமா? எங்கள் போராட்டம் தொடரும்; நாங்கள் பின்வாங்க மாட்டோம்.ஜே
நேற்று எங்கள் பிரதிநிதிகள் ஜே.பி.நட்டாவின் இல்லத்துக்கு சென்ற பிறகு, அவர்களின் அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அசுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோர் ஜே.பி. நட்டாவின் இல்லத்திலேயே வீட்டுக்காவலில் இருப்பது போல வைக்கப்பட்டனர்; அவர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை. அவர்களை தனியாக பிரித்து, என்னை மட்டும் தனியாக இங்கே விட்டுவிட்டு, அதன் பிறகு குழப்பமான சூழலை உருவாக்குவதே ஒட்டுமொத்த திட்டமாக இருந்தது” என்று தீப்கே கூறினார்.