இந்தியா

சுதந்திர பரத்வாஜை கைது செய்வதாக டெல்லி போலீஸ் உறுதி: சிஜேபி தகவல்

மோகன் கணபதி

புதுடெல்லி: சிஜேபி ஆதரவாளர் நிஷு ஆசாத்தின் தந்தை தாக்கப்பட்ட விவகாரத்தில் இந்துத்துவ ஆதரவாளர் சுதந்திர பரத்வாஜ் 72 மணி நேரத்துக்குள் கைது செய்யப்படுவார் என டெல்லி போலீஸார் உறுதி அளித்துள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) ஆதரவாளர் நிஷு ஆசாத்தின் தந்தை சஞ்சய் குமாரை தாக்கிய இந்துத்துவ ஆதரவாளர் சுதந்திர பரத்வாஜை கைது செய்ய வேண்டும், அவர் மீது போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிஜேபி அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர்களான சவுரவ் தாஸ், ஆசுதோஷ் ரங்கா, நிஷு ஆசாத் உள்ளிட்டோர் டெல்லி நாடாளுமன்ற காவல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அவர்கள் காவல் நிலைய அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சவுரவ் தாஸ், “சுதந்திர பரத்வாஜ் போன்ற குண்டர்கள் ஜந்தர் மந்தருக்கு வந்தனர். டெல்லி காவல் துறை ஏன் அவரை அடையாளம் காணவில்லை? அவர் கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டெல்லி காவல் துறை அவரை காப்பாற்றுகிறது.

சுதந்திர பரத்வாஜ், நிஷு ஆசாத்துக்கு மிரட்டல்கள் விடுத்துள்ளார். அவரது தந்தை சஞ்சய் குமாரை தாக்கி உள்ளார். இதை அவரே சமீபத்திய நேர்காணலில் ஒப்புக்கொண்டுள்ளார். கபில் மிஸ்ரா, சிராக் பாஸ்வான் ஆகியோரின் ஆதரவால் தான் விடுவிக்கப்பட்டதாக அவரே வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

எனவே, அவர் மீது காவல் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். 72 மணி நேரத்துக்குள் அவர் கைது செய்யப்படுவார் என போலீஸார் வாக்குறுதி அளித்துள்ளனர். அதோடு, சுதந்திர பரத்வாஜுக்கு ஆதரவாக சில தலைவர்கள் செயல்பட்டது குறித்து பாஜக விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

சுதந்திர பரத்வாஜ் மீது கொலை முயற்சி, எஸ்.சி. / எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியுமாறு தாங்கள் காவல் துறையை வலியுறுத்தியதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சட்டப் பிரிவைச் சேர்ந்த ரிஷப் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொலை முயற்சி, எஸ்.சி. / எஸ்.டி. சட்டம், மிரட்டல் போன்ற முக்கிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது. போலீஸார் அதை ஏற்றுக்கொண்டதுடன் 72 மணி நேரத்துக்குள் சுதந்திர பரத்வாஜை கைது செய்வதாக உறுதி அளித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

சுதந்திர பரத்வாஜ் அளித்த நேர்காணல் வீடியோ ஒன்று நேற்று வெளியானது. அதில், சஞ்சய் குமாரை தான் தாக்கியது குறித்தும், தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு குறித்தும் விளக்கி இருந்தார். அதன் காரணமாகவே தான் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறி இருந்தார்.

இந்த வீடியோ வெளியானதை அடுத்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிஜேபியினர் வலியுறுத்தி உள்ளனர். எனினும், அந்த வீடியோ போலியானது என்று தெரிவித்துள்ள சுதந்திர பரத்வாஜ் தற்காத்துக்கொள்ளும் நோக்கிலேயே சஞ்சய் குமாரை தாக்கியதாகக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT