புதுடெல்லி: டெல்லி சித்தரஞ்சன் பூங்கா பகுதியில் உள்ள பெங்காளிகள் மீன் சந்தையை மூடச் சொல்லி பாஜகவினர் மிரட்டுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு காட்சிப் பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், காவி உடை அணிந்த இருவர், கடைக்காரர்களிடம் கடைகளை மூடுமாறு வலியுறுத்துவது பதிவாகியிருந்தது. கோவிலை ஒட்டி அமைந்த மீன் சந்தை, கோவிலின் புனிதத்தன்மையைச் சிதைப்பதாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் அந்தக் காணொளியில் தோன்றுபவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து டிஎம்சி எம்பி மஹுவா தனது சமூக வலைதளத்தில், “டெல்லியின் சித்தரஞ்சன் பூங்காவில் மீன் உண்ணும் பெங்காளிகளை, காவிப் படையைச் சேர்ந்த பாஜக குண்டர்கள் மிரட்டுவதை தயவுசெய்து பாருங்கள். கடந்த 60 ஆண்டுகளில் இதுபோன்று நடந்ததே இல்லை என்று அங்கு குடியிருப்போர் கூறுகின்றனர். பாஜக குண்டர்கள் உரிமை கொண்டாடும் சித்தரஞ்சன் பூங்கா கோவிலை, அந்த மீன் சந்தை வியாபாரிகள் தான் கட்டினர். இதை வழிபடுபவர்களும் அவர்களே. பெரிய பூஜைகளும் அங்கே நடைபெறுகின்றன. டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களே ஆகின்றன. இது ஒரு 'சிறந்த' பரிசு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மஹுவா மொய்த்ரா தனது மற்றொரு பதிவில், "தாங்கள் கட்டிய கோவிலுக்கு அருகில் உள்ள சட்டபூர்வமான கடைகளை மூடுமாறு கூறி, இந்து மீன் வியாபாரிகளை அச்சுறுத்துகின்றனர். பாஜக குண்டர்கள் காணொளியில் சிக்கியுள்ளனர். ஆனால், இன்னும் எவரும் கைது செய்யப்படவில்லை. நாங்கள் அனைவரும் 'டோக்ளா' (குஜராத்தின் முக்கிய உணவு) மட்டுமே சாப்பிட்டுக்கொண்டு 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிட வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மஹுவா வெளியிட்டுள்ள அந்த காட்சிப்பதிவின் நம்பகத்தன்மையைச் சந்தேகித்து பாஜகவும் பதிவுகளை இட்டு வருகிறது. தேசியத் தலைநகரில் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க மொய்த்ரா முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியதுடன், அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியின் கிரேட்டர் கைலாஷ்-1 தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஷிகா ராய் தனது எக்ஸ் பதிவில், ’மொய்த்ராவின் குற்றச்சாட்டு பாஜகவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் ஒரு தீய பிரச்சாரம்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியின் முன்னாள் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியின் தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ”இந்த மீன் கடைகள் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தால் ஒதுக்கப்பட்டவை. அவை சட்டவிரோதமானவை அல்ல. சித்தரஞ்சன் பார்க் பகுதி பெங்காளிகள் மீன் சாப்பிடுவதில் பாஜகவுக்குப் பிரச்சினை இருந்திருந்தால், அதைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
சித்தரஞ்சன் பார்க் பகுதியில் உள்ள வங்காளிகள் மிகவும் படித்தவர்கள். அவர்களின் உணர்வுகளும் உணவுப் பழக்கங்கள் மதிக்கப்பட வேண்டும். நான் சைவ உணவு உண்பவன். பெங்காளிகளின் உணவுப் பழக்கங்களில் எனக்கு ஒருபோதும் எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. இவ்வளவு அமைதியான பகுதியில் பாஜக ஏன் பிரச்சினைகளை உருவாக்குகிறது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி சித்தரஞ்சன் பூங்காவில் உள்ள இரண்டு மீன் சந்தைகளும் 1971 இல் அமைக்கப்பட்டன. சந்தை 1இல் சுமார் 27 கடைகளும், சந்தை 2 இல் சுமார் 12 கடைகளும் உள்ளன. சந்தை 1-இன் ஒரு சுவர், அங்கிருந்த கடைக்காரர்களாலேயே கட்டப்பட்ட ஒரு காளி கோவிலுடன் ஒட்டியவாறு அமைந்துள்ளது.