கோப்புப் படம்

 
இந்தியா

இந்தி அகாடமி விருதுகளுக்கு வீர சாவர்க்கர், வாஜ்பாய் பெயர்கள் - டெல்லி அரசு அறிவிப்பு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: டெல்லி அரசின் இந்தி அகாடமி விருதுகளுக்கு விநாயக தாமோதர சாவர்கர், தீன் தயாள் உபாத்யாயா, மதன் மோகன் மாளவியா, அடல் பிஹாரி வாஜ்பாய் உள்ளிட்டோரின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தி அகாடமி சார்பில் டெல்லி அரசு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. எனினும், கடந்த நான்கு கல்வி வருடங்களாக இந்த விருதுகள் அளிக்கப்படாமல் உள்ளன. இதை கருத்தில் கொண்டு, 2022-23, 2023-24, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய கல்வி ஆண்டுகளுக்கான பல்வேறு விருதுகளுக்கு டெல்லி அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

இந்தி அகாடமியின் ‘சாகித்யகார் சம்மான் யோஜனா’ திட்டத்தின் கீழ், தேசிய மொழியை மேம்படுத்தப் பணியாற்றிய இந்தி இலக்கியவாதிகள், கவிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பணப் பரிசுகளுடன் கூடிய பதினாறு வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன.

தேசிய தலைநகர் மற்றும் அதன் பிராந்தியத்தில் வசிப்பவர்கள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூன் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு டெல்லி அரசு கோரியுள்ளது.

இந்த விருதுகளில், சில விருதுகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. விநாயக தாமோதர சாவர்க்கர், தீன் தயாள் உபாத்யாயா, மதன் மோகன் மாளவியா, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மறைந்த பாஜக மூத்த தலைவரும் டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருமான விஜய் குமார் மல்ஹோத்ரா ஆகியோரின் பெயர்களில் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன.

வீர சாவர்க்கர் என அழைக்கப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர், நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய தலைவர்களில் முக்கியமானவர். பல ஆண்டுகள் அந்தமான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டவர். இந்து மகா சபாவின் தலைவராக இருந்தவர். பாஜகவின் முந்தைய அரசியல் கட்சியான ஜனசங்கத்தின் நிறுவனர்களில் ஒருவர். பண்டிட் மதன் மோகன் மாளவியா ஓர் இந்திய கல்வியாளர். இவர் நிறுவியதுதான் வாராணாசியிலுள்ள பனரஸ் இந்து பல்கலைகழகம். இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவராக நான்கு முறை பதவி வகித்த இவர், விடுதலைப் போராட்ட வீரராக விளங்கியவர்.

‘இந்தி அகாடமி ஷலாகா சம்மான்’ விருது, தற்போது ‘பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா ஷலாகா சம்மான்’ எனப் பெயர் மாற்றப்பட்டு, விருதுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

‘அடல் பிஹாரி வாஜ்பாய் பாரதிய சம்ஸ்கிருதி மற்றும் ஜியான் பரம்பரா சம்மான்’ விருதுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. பெண் இலக்கியவாதிகளுக்கான ராணி அகல்யாபாய் ஹோல்கர் சம்மான் விருதுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட உள்ளது. பெண் இலக்கியவாதிகளுக்கான இந்த விருது, முன்பு சாலை விபத்தில் உயிரிழந்த ஊழல் எதிர்ப்பு ஆர்வலர் சந்தோஷ் கோலியின் பெயரில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது வழங்கப்பட்டு வந்தது.

சந்த் ரவிதாஸ் சாகித்ய சம்மான் மற்றும் தேசிய உணர்வை வளர்த்ததற்கான ‘வீர சாவர்க்கர் சம்மான்’ விருதுக்கு ரூ.2 லட்சம் பரிசு அளிக்கப்பட உள்ளது. பிற விருதுகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.

இந்த பட்டியலில், பண்டிட் மதன் மோகன் மாளவியா இந்தி சாகித்யகார் சம்மான், குழந்தை இலக்கியங்களுக்காக பாபா ஜோராவர் சிங் சம்மான் மற்றும் சுவாமி விவேகானந்தர் யுவ பிரதிபா சம்மான் ஆகிய விருதுகள் இடம் பெற்றுள்ளன.

இந்தி இதழியலுக்காக வித்யா நிவாஸ் மிஸ்ரா சம்மான் மற்றும் இந்தி மொழியை மேம்படுத்துவதற்கான டாக்டர் விஜய் குமார் மல்ஹோத்ரா இந்தி சேவி சம்மான் ஆகிய இரண்டு விருதுகளுக்கும் தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.

டெல்லி அரசின் இந்தி அடாமி விருதுகளின் பட்டியலில், இந்தி மொழிபெயர்ப்புக்கான 'நிர்மல் வர்மா சம்மான்', 'ராமச்சந்திர சுக்லா இந்தி உத்கர்ஷ் சம்மான்' ஆகியவை இடம் பெற்றுள்ளன. இத்துடன், நாட்டுப்புற இலக்கியப் படைப்புகளுக்கான 'வாசுதேவ சரண் அகர்வால் சம்மான்' விருதும் உள்ளது.

மேலும், அறிவியல்,பொருளாதாரம், அரசியல் அறிவியல், வரலாறு, சமூகவியல் மற்றும் பிற துறைகள் சார்ந்த படைப்புகளுக்காகவும் விருதுகள் அளிக்கப்படுகின்றன.

பெண் இந்தி எழுத்தாளர்களுக்காக 'தேவேந்திர ஸ்வரூப் சம்மான்' மற்றும் 'மிருதுளா சின்ஹா சம்மான்' ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு இலக்கிய வடிவங்களில் படைப்புகளை வழங்கியவர்களுக்கான 'நரேந்திர கோஹ்லி சம்மான்' என்ற விருதும் அளிக்கப்படுகிறது.

முதல்வர் ரேகா குப்தா தலைமையில் டெல்லியில் பாஜக அரசு அமைந்த பிறகு, அதன் இந்தி அகாடமி புதிய பொலிவு பெற்று வருகிறது. இவ்விருதுகள் குறித்த விவரங்கள் அகாடமியின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT