புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 1983-ல் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு முன்பே 1980-ல் தனது பெயரை முறைகேடாக வாக்காளர் பட்டியலில் சேர்த்ததாகக் கூறி, வழக்கறிஞர் விகாஸ் திரிபாதி என்பவர் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த நீதிமன்றம், வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து திரிபாதி சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கை மீண்டும் புதிதாக விசாரிப்பதற்காக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்பினார். செப்டம்பர் 29-ம் தேதி வழக்கின் புதிய விசாரணையை தொடங்க உத்தரவிட்டார்.