புதுடெல்லி: தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் 6 மாடி கட்டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் 6 மாடி கட்டிடம் மாணவர் விடுதியாக செயல்பட்டு வந்தது. டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்துக்கு அருகில் இக்கட்டிடம் இருந்ததால் ஏராளமான மாணவர்கள் தங்கிப் படித்து வந்துள்ளனர். இந்த கட்டிடம் நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு 12 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புத் துறையினரும், காவல் துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, டெல்லி பேரிடர் நிர்வாக ஆணையம் ஆகியவை தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும்கூட மீட்புப் பணிகள் நடைபெற்றன.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில், ஒருவர் இன்று காலை மீட்கப்பட்டார். இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒருவரது உடல் இன்று மீட்கப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கட்டிட உரிமையாளர் ஹரிராம் குப்தா உள்ளிட்டோர் மீது சட்டப்பிரிவுகள் 105, 290, 125(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ராஜஸ்தானின் பிவாடியில் இருந்த ஹரிராம் குப்தாவை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ள போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுயை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெல்லி மாநகராட்சி உத்தரவு:
இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு அருகே பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை மூன்று நாட்களில் இடிக்க அதன் உரிமையாளருக்கு டெல்லி மாநகராட்சி அவகாசம் அளித்துள்ளது. தவறினால், கட்டிடத்தை டெல்லி மாநகராட்சியே இடிக்கும் என்றும், அதற்கான செலவை உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கும் என்றும் டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.