டெல்லி காற்று மாசு
புதுடெல்லி: காற்று மாசு அதிகரித்துள்ளதால் டெல்லியில் பள்ளிகளில் வகுப்பறைக்கு வெளியிலான நிகழ்வுகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. காற்று மாசு நாளுக்குநாள் கடுமையாகி வரும் நிலையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெல்லி பள்ளிகள் மைதானத்தில் மாணாக்கரை விளையாட அனுமதிப்பதைத் தடுப்பதைப் பரிசீலிக்கும்படி உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்த நிலையில் டெல்லி அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு அதிகம். அதுவும் குறிப்பாக குளிர் காலங்களில் டெல்லியில் காற்று மாசும், பனி மூட்டமும் சேர்ந்து மக்களுக்கு கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இதற்கு வாகனப் புகை மற்றும் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிப்பதனால் ஏற்படும் புகை காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, டெல்லியில் பள்ளிகளில் வகுப்பறைக்கு வெளியிலான நிகழ்வுகளுக்கு அரசு தடை விதித்துள்ளது.
மருத்துவர்கள் பலரும், காற்று மாசுபாடு காரணமாக பெரியவர்களைவிட குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கின்றனர். குழந்தைகளின் நுரையீரல் முழுமையாக வளர்ச்சி பெறும் முன்னர் அவர்கள் காற்று மாசு காரணமாக உடலில் நச்சை அதிகளவில் வாங்கிக் கொள்கின்றனர். இது அவர்களின் நுரையீரல் தாங்கும் திறனை வெகுவாகக் குறைத்து மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற உபாதைகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்.
டெல்லி உகளவில் மிக மோசமான காற்று மாசைக் கொண்ட நாடாக உள்ளது. டெல்லி வாழ் மக்களுக்கு ஆஸ்துமா, இருமல் பாதிப்பு எல்லாம் சாதாரணமாகிவிட்டது. பலரும் இன்ஹேலர் உபயோகிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நவம்பர் பிறந்த பின்னர் தங்களிடம் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை 30 முதல் 40% வரை அதிகரித்துள்ளதாக சிறார் நுரையீரல் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுத்தமான காற்று எங்கள் உரிமை என்ற பதாகை ஏந்தியபடி மக்கள் போராட்டம் வெடித்தது நினைவுகூரத்தக்கது.