இந்தியா

டெல்லியில் தகிக்கும் வெப்பம் - வட இந்தியாவில் வெப்ப அலை தீவிரம் அடைவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

மோகன் கணபதி

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. வட இந்தியாவின் சில பகுதிகளில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி உள்ளதாகத் தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், அடுத்த 5 நாட்களுக்கு வட இந்தியாவில் வெப்ப அலை தீவிரமடையும் என கூறியுள்ளது.

கோடை வெயில் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், வட மற்றும் மத்திய இந்தியாவில் கூடுதல் தீவிரத்துடன் உள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று (மே 18) அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் 46 டிகிரி செல்சியஸ் ஆகவும், மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் 48 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு வட மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் பகுதிகளில் வெப்ப அலை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இதனால், கிழக்கு ராஜஸ்தான் மற்றும் அதை ஒட்டிய மத்திய இந்தியா, உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், கிழக்கு குஜராத், மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் மக்கள் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளது.

சமீபத்திய இந்த வெப்ப அலை, இந்த பருவத்தில் இதுவரை இல்லாதது என்றும், மிகவும் பரவலான மற்றம் கடுமையான வெப்ப நிகழ்வுகளில் ஒன்று என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வறண்ட காற்றும், தீவிர சூரிய வெப்பமும் இணைந்து உள்நாட்டுப் பகுதிகளில் வெப்ப நிலையை வேகமாக உயர்த்துவதாகத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதனால் பிற்பகல் உச்ச வெப்பம் தொடங்குவதற்கு முன்பே பல நகரங்களில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் மூடிய மழை பரவலாக பெய்யாததும், மேகமூட்டம் இல்லததுமே நிலப்பரப்புகள் வேகமாக வெப்பமடையக் காரணம் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ராஜஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வீசும் வெப்பமான மேற்கு மற்றும் வடமேற்குக் காற்று, நிலைமையை மேலும் மோசமாக்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமவெளிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டி, இயல்பான அளவைவிட கணிசமாக அதிகமாக இருக்கும்போது அதை இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை என வரையறுக்கிறது. வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை தாண்டி நீண்ட நேரம் நீடிக்குமானால் அது ஆபத்தானதாக மாறக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.

குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள், வெட்டவெளியில் பணியாற்றுபவர்கள் ஆகியோரிடையே நீரிழப்பு, வெப்ப சோர்வு, வெப்பத் தாக்கம் ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை இது அதிகரிக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது வட இந்தியாவின் பெரும் பகுதி ஒரு பெரிய வறண்ட வெப்பக் குவி மாடத்தின் கீழ் சிக்கியுள்ளதாகவும், நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT