ஏசிபி விவேக் பகத்

 
இந்தியா

பதவி உயர்வை நிறுத்தி வைக்க டெல்லி ஏசிபி கோரிக்கை: காவல் ஆணையருக்கு கடிதம்

ஆர்.ஷபிமுன்னா

புது டெல்லி: டெல்லியில் பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகாரளித்த ஏசிபி விவேக் பகத்துக்கு துணை ஆணையராகப் பதவி உயர்வு கிடைத்துள்ளது. ஆனால், தன் மீதானப் பாலியல் வழக்கால் பதவி உயர்வு உத்தரவை நிறுத்தி வைக்கும்படி ஏசிபி பகத், காவல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்து அக்டோபர் 3 முதல் டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டத்தில் செய்தி சேகரிக்க 3 பெண் பத்திரிகையாளர்கள் சென்றிருந்தனர். கடந்த அக்டோபர் 4-ல் இவர்கள் பாலியல் ரீதியாகத் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாகப் புகார் அளித்தனர்.

குறிப்பாக, அங்கு பணியிலிருந்த டெல்லி காவல் துறையின் கூடுதல் உதவி ஆணையரான விவேக் பகத் பெயரையும் அந்த புகாரில் தெரிவித்திருந்தனர். இப்போது இந்த வழக்கு டெல்லி குற்றப் பிரிவின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏசிபி விவேக் பகத் உள்ளிட்ட 12 அதிகாரிகளுக்கு கூடுதல் துணை ஆணையராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் காவல் பிரிவு அதிகாரிகள். இதற்கான உத்தரவை டெல்லியின் துணைநிலை ஆளுநர் தரண் ஜித் சிங் சாந்து வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக, ஏசிபி விவேக் பகத், காவல் ஆணையருக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தன் மீது வழக்கு பதிவாகி உள்ளதால், தனக்கு அளிக்கப்பட்ட புதிய பணிப் பொறுப்பை நிறுத்தி வைக்குமாறு அவர் அதில் கோரியிருந்தார்.

இது குறித்து தனது கடிதத்தில் ஏசிபி விவேக் பகத் குறிப்பிடுகையில், ‘பெண் பத்திரிகையாளர்களை நான் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக என் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

இதனால், இந்த விவகாரம் குறித்த முழுமையான மற்றும் திருப்திகரமான விசாரணை முடியும் வரை, தனக்கு ஒதுக்கப்பட்ட தற்போதைய பொறுப்பை ஏற்க முடியாத நிலையில் உள்ளேன். எனவே, என் மீதான வழக்கு முடியும் வரை எனது பதவி உயர்வு உத்தரவை நிறுத்தி வைக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

விவேக் பகத் தாமாகவே முன்வந்து கோரியதை ஏற்றுக்கொண்ட டெல்லி அரசு, அவரது பதவி உயர்வு தொடர்பான நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து, தன் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கும் உத்தரவில் டெல்லி அரசு திருத்தம் செய்துள்ளது. அக்டோபர் 5-ஆம் தேதியிட்ட உத்தரவு மாற்றியமைக்கப்பட்டு, மீதமுள்ள 11 அதிகாரிகளுக்கு மட்டும் அது மீண்டும் வெளியிடப்படவுள்ளது.

ஏசிபியின் போலி காட்சிப் பதிவு

இதனிடையே, பெண் பத்திரிகையாளர்களை பின்புறமாக, ஏசிபி விவேக் பகத் தொட்டுத் தள்ளியதாக வெளியான காட்சிப் பதிவு போலியானது எனத் தெரியவந்துள்ளது. இதன் மீதான விசாரணையில் டெல்லியின் சைபர் கிரைம் காவல் பிரிவினர் அந்த பதிவு ஏ.ஐ மூலம் திருத்தி வெளியிடப்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.

இந்த போலி வீடியோவை தன் யூடியூப்பில் வெளியிட்ட நதீம் என்பவரை ஹரியானாவின் பல்வல்லில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நதீம் தாம் ஏ.ஐ மூலம் அக்காட்சிப்பதிவை திருத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

பல்வல்லின் மதரஸாவில் படித்த நதீம் பிறகு, 10-ஆம் வகுப்பு முடித்துள்ளார். 2019 முதல் ஒரு செய்தி யூடியூப் சேனல் துவங்கி நடத்தி வருகிறார். இவரது பழைய பதிவுகளையும் டெல்லி காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.

SCROLL FOR NEXT