புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 17-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புதான் காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா். இது தொடர்பாக தானே மாவட்டத்திலுள்ள பிவாண்டி நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர் ராஜேஷ் குந்தே, ராகுல் மீது அவதூறு வழக்கு தொடுத்தார். அதில், காந்தி படுகொலை குறித்து ராகுல் பொய்யான தகவலை கூறியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கூடுதல் சிவில் நீதிபதி (இளநிலை பிரிவு) பி.எம். கோல்சே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், பிணை தொடர்பான நடைமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதால், விசாரணையை வரும் ஜனவரி 17-ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இந்த வழக்கில் ராகுலுக்கு பிணை நின்ற முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சிவராஜ் பாட்டீல் கடந்த 12-ம் தேதி காலமானார். இதனால் புதிய பிணைதாரரை ராகுல் நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.