உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம் 
இந்தியா

எம்எல்ஏ தகுதி நீக்கம் குறித்து அக்.8-க்குள் முடிவெடுக்க மேற்கு வங்க சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் அதிருப்தி எம்​எல்​ஏக்​களை கட்​சித்​தாவல் தடைச் சட்​டத்​தின் கீழ் தகுதி நீக்​கம் செய்​யக் கோரிய மனுக்​கள் மீது அக்​டோபர் 8-ம் தேதிக்​குள் முடிவு எடுக்​கு​மாறு மேற்​கு​ வங்க சட்​டப்​பேரவை சபா​நாயகரை உச்ச நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சியி​லிருந்து விலகி தனி அணி​யாக செயல்​பட்​டு​வரும் அரூப் ராய், ரிதப்​ரதா பானர்​ஜி, ஃபிர்​ஹாத் ஹக்​கீம், சந்​தீபன் சாஹா, ஷியூலி சாஹா, அக்​ருஸ்​ஸ​மான், சபீனா யாஸ்​மின், ரதின் கோஷ், பிப்​லப் மித்​ரா,ஜாவேத் அகமது கான் ஆகிய 10 எம்​எல்​ஏக்​களை தகுதி நீக்​கம் செய்​யக்​கோரி மேற்​கு​வங்க சபா​நாயகரிடம் மனு அளிக்​கப்​பட்​டது.

ஆனால், அந்த மனு மீது 3 மாதங்​களாக நடவடிக்கை எடுக்​கப்​ப​டாத​தால், திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் உறுப்​பினர் சோபன்​தேப் சத்​தோ​பாத்​யாய் உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​தார். இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிப​தி​கள் ஜாய்​மால்யா பக் ஷி மற்​றும் வி. மோகனா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, “தகுதி நீக்க மனுக்​கள் மீது முடி​வெடுக்க உச்ச நீதி​மன்​றம் 3 மாத வரம்பு நிர்​ண​யித்​துள்​ளது. ஆனால் இந்த விஷ​யத்​தில் முடி​வெடுப்​ப​தில் கால​தாமதம் ஏற்​படு​கிறது, இதில் நீதி​மன்​றம் தலை​யி​டா​விட்​டால் அரசி​யல் குழப்​பம் ஏற்​படக்​கூடும்” என்று வாதிட்​டார்.

தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், “தகுதி நீக்​கம் தொடர்​பான முடிவை எடுப்​பது குறித்து நீதி​மன்​றத்​தின் முந்​தைய தீர்ப்​பு​களில் வரையறுக்​கப்​பட்​டுள்ள காலக்​கெடுவை சபா​நாயகர் பின்​பற்​று​வார் என்று நம்​பு​கிறேன். இந்த வழக்​கில் கால அவகாசம் அக்​டோபர் 8-ம் தேதி​யுடன் நிறைவடை​யும் நிலை​யில், அதற்​குள் உரிய முடிவை எடுக்க சபா​நாயகர் அறி​வுறுத்​தப்​படு​கிறார்” எனக் கூறி வழக்​கை தள்​ளு​படி செய்​து உத்​தர​விட்​டார்​.

SCROLL FOR NEXT