இந்தியா

குடியுரிமை விவகாரத்தில் நியாயமான நடைமுறை அவசியம் - அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

மோகன் கணபதி

புதுடெல்லி: குடியுரிமை விவகாரத்தில் நியாயமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்ட 27 நபர்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது.

அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை வெளியேற்றும் நோக்கில் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பாயங்களால் 27 நபர்கள் அந்நிய நாட்டவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டனர். மேலும், இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த கவுகாத்தி உயர் நீதிமன்றமும் தீர்ப்பாயங்களின் தீர்ப்பை உறுதிப்படுத்தி இருந்தது.

இந்நிலையில், அந்நிய நாட்டவர்கள் என அறிவிக்கப்பட்ட சாவித்ரி டே, அஜ்பஹார் அலி, முகமது அக்பர் அலி, அபேதா காத்தூன், அனுவாரா காத்தூன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த மனுக்கள், நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “குடிரிமை மற்றும் அந்நியர் அந்தஸ்து ஆகியவை மிக உயர்ந்த அரசியலமைப்பு மற்றும் சட்ட முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்திய குடியுரிமையைக் கோர சட்டப்பூர்வ உரிமை இல்லாதவர்கள், நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்தி குடியுரிமை அந்தஸ்தைப் பெறுவதை தடுப்பதில் அரசுக்கு நியாயமான மற்றும் வலுவான அக்கறை உள்ளதை இந்த நீதிமன்றம் ஏற்கிறது. இருப்பினும், அரசின் இந்த அக்கறையானது நீதித்துறையின் நியாயத்தன்மைக்கு மேலானதாக இருக்க முடியாது.

கவுகாத்தி உயர் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயங்களால் இவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. அந்நியர்கள் என அறிவிக்கப்பட்ட 27 நபர்களுக்கு எதிராக தீர்ப்பாயங்கள் மீண்டும் விசாரணை நடத்தும்வரை இவர்களுக்கு எதிராக எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது. மனுதாரர்களின் குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களை நாங்கள் ஆய்வு செய்யவில்லை.” எனத் தெரிவித்துள்ளனர்.

அஸ்ஸாமைச் சேர்ந்த மனுதாரர்கள் தாங்கள் இந்தியர்கள் என்றும், பழைய வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களில் ஏற்பட்ட எழுத்துப் பிழைகள், முரண்பாடுகள் போன்ற நுணுக்கமான சில காரணங்களால் தாங்கள் அந்நியர்களாக அறிவிக்கப்பட்டதாக முறையிட்டனர்.

மேலும், 1971-க்கு முந்தைய மரபுவழித் தரவுகள், வாக்காளர் பட்டியல்கள், நில ஆவணங்கள் போன்ற ஆவணங்களை மனுதாரர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். தற்போது இவர்களின் குடியுரிமை தொடர்பாக தீர்ப்பாயங்கள் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டிருப்பதன் மூலம் இவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைத்திருக்கிறது.

SCROLL FOR NEXT