இந்தியா

ஓம் பிர்லாவை நீக்குவதற்கான தீர்மானம் மீது மார்ச் 9ல் விவாதம், வாக்கெடுப்பு: கிரண் ரிஜிஜு

வெற்றி மயிலோன்

புது டெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மார்ச் 9 அன்று நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

அருணாச்சலப் பிரதேசம் மேற்கு மக்களவைத் தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, "மார்ச் 9 ஆம் தேதி மக்களவையில், சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை நடத்துவோம். முதல் நாளே நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வது விதி. விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடைபெறும்.

          

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில் மக்களவையில், ஐந்து அமைச்சகங்களில் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிப்போம், மாநிலங்களவையில், மற்ற ஐந்து அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்போம். மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம் மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி சுவாரஸ்யமாக இருக்கும்.

அப்போது ஒரு மிக முக்கியமான மசோதா உட்பட சில முக்கியமான மசோதாக்களை நாங்கள் கொண்டு வருவோம். மசோதா என்ன என்பதை நாங்கள் இப்போது வெளியிட மாட்டோம். ஆனால், இந்த மசோதாக்கள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றுவோம். விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை என்றால், அது அவர்களின் இழப்பாக இருக்கும்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் விரிசல் ஏற்படக்கூடும். ஏனென்றால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் திரிணமூல் காங்கிரஸ் கையெழுத்திடவில்லை. பெரும்பாலான கட்சிகள் அவையை முடக்குவதை ஆதரிக்கவில்லை. குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் தங்கள் பிரச்சினைகளை அவையில் எழுப்ப விரும்புகிறார்கள்” என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 அன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கி பிப்ரவரி 12 அன்று முடிந்தது. 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 9 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2 ஆம் தேதி முடிவடையும்.

SCROLL FOR NEXT