எம்எல்ஏ மைதிலி தாக்குர், அமைச்சர் மங்கல் பாண்டே
பாட்னா: பிஹார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் அலிநகர் தொகுதியின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் மைதிலி தாக்குர், தனது தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மிகவும் சிதிலமடைந்துள்ளதாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான மங்கல் பாண்டே, “மருத்துவமனைக் கட்டிடம் நல்ல நிலையில்தான் உள்ளது. சிறிய பழுது பார்ப்புப் பணிகள் மட்டுமே அதில் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார்.
அமைச்சரின் இந்தப் பதிலால் அதிருப்தியடைந்த மைதிலி தாக்குர், அடுக்கடுக்கான துணை கேள்விகளை எழுப்பினார். அப்போது அவர் கூறுகையில் “அமைச்சரின் பதில் எனக்கு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை.
நான் அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். கட்டிடம் மிகவும் மோசமான நிலையிலும் இடியும் தருவாயிலும் உள்ளது. ஆனால், கட்டிடம் நன்றாக இருப்பதாக அமைச்சர் கூறியது வியப்பாக இருக்கிறது. எதார்த்த நிலைக்கு மாறாக அமைச்சரின் பதில் உள்ளது” என்றார்.
மேலும், அந்த மருத்துவமனையில் முன்பு இரண்டு எம்பிபிஎஸ் மருத்துவர்கள் பணியாற்றி வந்த நிலையில், தற்போது ஆயுஷ் மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கவனத்தைப் பெற்ற இளம் தலைவரான மைதிலி தாக்குர், தனது சிறுவயது முதலே மங்கல் பாண்டேவை தமக்குத் தெரியும் என்று குறிப்பிட்டதோடு, தொகுதியின் நலன் கருதி அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.