இந்தியா

“தலித் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல” - பெங்களூரு  கருத்தரங்கில் ரூத் மனோரமா பேச்சு

இரா.வினோத்

பெங்களூரு: “தலித் பெண்கள் மூங்கிலை போல மென்மையாக வளைந்து கொடுத்தாலும் அவர்கள் பலவீனமானவர்கள் இல்லை,” என பெங்களூருவில் நடைபெற்ற தேசிய தலித் மகளிர் கருத்தரங்கில் மனித உரிமை செயற்பாட்டாளர் ரூத் மனோரமா தெரிவித்தார்.

தேசிய தலித் மகளிர் கூட்டமைப்பின் சார்பில் ‘தலித் பெண்ணிய சகோதரத்துவ கருத்தரங்கம்’ பெங்களூருவில் மே 14-ம் தேதி தொடங்கியது. மே 19-ம் தேதிவரை நடைபெறும் இந்த கருத்தரங்கில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ரூத் மனோரமா, ஜோதி ராஜ், பிரியங்கா சாமி மற்றும் நேபாளத்தை தலித் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.

இதில் ரூத் மனோரமா பேசுகையில், “கடந்த 50 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு தேசிய அளவில் தலித் பெண்கள் கூட்டமைப்பை நடத்தி வருகிறோம். சமூகத்தின் பின்தங்கிய வகுப்பினருக்கான அமைப்பை கட்டமைப்பதிலும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராடுவதிலும் இந்த அமைப்பு மிகுந்த சவால்களுக்கு மத்தியில் உறுதியாக செயல்பட்டு வருகிறது.

தலித் பெண்கள் ஆணாதிக்கம், சாதி கொடுமை, வன்முறை, புறக்கணிப்பு என பல தளங்களிலும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த பெண்களை ஒருங்கிணைத்து தலைமைத்துவ பயிற்சிகளை கொடுத்து பாபாசாகேப் அம்பேத்கரின் வழியில் பயணிக்கச் செய்கிறோம். அவரது கூற்றின்படி கல்வியை புகட்டி, போராட்டம் நடத்தி, அனைவரையும் ஒன்றிணைத்து வலுவான சக்தியாக மாற்றி வருகிறோம்.

தலித் பெண்கள் ஒருபோதும் பலவீனமானவர்கள் இல்லை. அவர்கள் மிகவும் வலிமையானவர்கள். மூங்கில் போன்று வளைந்து கொடுத்தாலும், ஒருபோதும் முறிந்துவிட மாட்டார்கள். எனவே தலித் பெண்களை அமைப்புகளாக உருவாக்கி, புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு சமூக மாற்றத்துக்கு உழைக்க அழைப்பு விடுக்கிறேன்,” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT