அமராவதி: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘முரசு’ புயல் ஆந்திர பிரதேச கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்புயல் கரையைத் தாண்டும் வேளையில் மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், பல மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புயல் அச்சுறுத்தல் காரணமாக விஜய்வாடா, திருப்பதி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்களில் இயக்கப்படவிருந்த 19 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மாலை 6 மணி நிலவரப்படி 'முரசு' புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது இப்புயல் நெல்லூருக்கு கிழக்கே 80 கி.மீ, காவாலிக்கு 90 கி.மீ, ஓங்கோலுக்கு 120 கி.மீ, பாப்பட்லாவிற்கு 150 கி.மீ, திருப்பதிக்கு 160 கி.மீ மற்றும் மச்சிலிப்பட்டினத்திற்கு 190 கி.மீ தொலைவில் மையம்கொண்டுள்ளது. நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் நெல்லூர் மற்றும் நரசாபுரம் இடையே ஓங்கோல் அருகில் கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தென் கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்பதால், அரசுத் துறை அதிகாரிகள் அனைவரும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
புயலால் ஏற்படக்கூடிய மின்தடை சீரமைப்புப் பணிகளுக்காக ஸ்ரீகாகுளம் முதல் கிருஷ்ணா மாவட்டம் வரை 31,000 மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தெற்கு கடலோர மாவட்டங்களில் சுமார் 8,000 மின் கம்பங்கள் சேதமடையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகளுக்கு உதவ சென்னையிலிருந்து மின்வாரிய ஊழியர்கள் ஆந்திரா செல்லவுள்ளனர்.
புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும், அதன் தாக்கத்தால் வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.