விசாகப்பட்டினம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்று அழுத்தத் தாழ்வு மண்டலம் ‘அர்னாப்’ தீவிர புயலாக வலுப்பெற்று, அக்டோபர் 28-ம் தேதி ஆந்திர கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்திலும், இடையிடையே 140 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், ஆந்திராவின் பாபட்லா முதல் விசாகப்பட்டினம் வரையிலான கடலோரப் பகுதிகள் உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.
புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தாலும், ஒடிசாவின் தெற்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால், ராயகடா, கோராபுட், மல்காங்கிரி, கஜபதி, கஞ்சம் ஆகிய 5 மாவட்டங்களில் அக்.28, 29 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரநிலையைச் சமாளிக்க ஒடிசா பேரிடர் விரைவுப் படையின் சுமார் 60 குழுக்கள், தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 17 குழுக்கள், தீயணைப்புச் சேவையின் 225 குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 100 புயல் நிவாரண முகாம்களும், 1,000 தற்காலிக தங்குமிடங்களும் தயார் செய்யப்பட்டு உள்ளன.