புவனேஸ்வர்: அக்வான் புயல் ஒடிசாவின் கோபால்பூர் அருகே கரையை கடந்த நிலையில், அதனால் பெரிய அளவில் சேதமோ, உயிர் இழப்போ ஏற்படவில்லை என்று அம்மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த அக்வான் புயல், இன்று காலை ஒடிசாவின் கோபால்பூர் அருகே கரையைக் கடந்தது. இந்த புயல் தற்போது வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (அக்வான் புயலின் எஞ்சிய பகுதி) கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது.
இது ஒடிசா வழியாக வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதைத் தொடர்ந்து வரும் 6 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும் வலுவிழக்கக்கூடும்.’ என தெரிவித்துள்ளது.
அக்வான் புயல் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், “அக்வான் புயல் தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. சனிக்கிழமை (நவ. 21) காலைக்குள் குறிப்பிடத்தக்க குறைந்த காற்றழுத்தப் பகுதியாக இது மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் வடக்கு ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் சாதனை அளவிலான மழை பதிவாகி உள்ளது. மழையின் தீவிரம் குறையக்கூடும் என்றாலும், மத்திய மற்றும் வடக்கு ஒடிசாவில் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அக்வான் புயலால் ஒடிசாவில் பெரிய அளவிலான சேதங்களோ அல்லது உயிர் இழப்புகளோ ஏற்படவில்லை என்று மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் புயலின் தாக்கத்தால் மாநிலத்தில் பலத்த மழை பெய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.