வதோதரா: “தங்க இறக்குமதி சார்ந்து அதிகளவிலான தொகையை நம் தேசம் செலவிடுகிறது. அந்த வகையில் சர்வதேச அளவில் இயல்பு நிலை திரும்பும் வரை தங்கம் வாங்குவதை மக்கள் தள்ளிப்போடலாம்” என்று பிரதமர் மோடி மீண்டும் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: “கடந்த சில ஆண்டுகளாக உலகமே அசாதாரண சூழலை எதிர்கொண்டு வருகிறது. முதலில் கரோனா பெருந்தொற்று, அதன் பின்னர் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சவால், இப்போது மேற்காசிய போர் பதற்றத்தால் உலக நாடுகள் சவாலை எதிர்கொண்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நெருக்கடியை கரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியது. இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய நெருக்கடியாக மேற்காசிய போர் நிலவி வருகிறது. நாம் எல்லோரும் இணைந்து எப்படி கரோனா சவாலை கடந்து வந்தோமோ, அது போல இந்த சவாலையும் நிச்சயம் நாம் கடந்து வருவோம். இதன் பாதிப்பு மக்களுக்கு ஏற்படாத வகையிலான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.
இதற்கு முன்பு நமது நாட்டில் போர் அல்லது இன்னும் பிற சவாலான சூழலை எதிர்கொள்ளும் போது அரசின் வேண்டுகோளை ஏற்று தேசத்தின் குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பை அறிந்து செயல்பட்டுள்ளனர். இன்று அதே சூழல் எழுந்துள்ளது. இதை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டி உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய பல லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிடுகிறது. அதே சமயத்தில் இறக்குமதி பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. அதோடு உலக அளவில் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களின் பயன்பாட்டை நாம் குறைக்க வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையில் இந்த பொருட்களை நாம் சார்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், அந்நிய செலவாணியில் தொடர்புடைய தனி செயல்பாட்டை தவிர்க்க வேண்டும்.
பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை நாட்டு மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். மெட்ரோ, பொது போக்குவரத்து, மின்சார வாகனங்கள் போன்றவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் டிஜிட்டல் தொழில்நுட்பம் பல்வேறு விஷயங்கள் எளிதானதாக மாற்றியுள்ளது. அந்த வகையில் அலுவலகம் சார்ந்த கூட்டத்தை ஆன்லைனில் விர்ச்சுவல் முறையில் நடத்தலாம். வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறையை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பின்பற்றலாம். தங்க இறக்குமதி சார்ந்து அதிகளவிலான தொகையை நம் தேசம் செலவிடுகிறது. அந்த வகையில் இயல்பு நிலை திரும்பும் வரை தங்கம் வாங்குவதை மக்கள் தள்ளிப்போடலாம்” என அவர் தெரிவித்தார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அன்று ஹைதராபாத் நகரில் பேசிய பிரதமர் மோடி, எரிசக்தி தடைகள் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் முடக்கிவிடக்கூடிய 21-ம் நூற்றாண்டின் உலகளாவிய சூழலில், எரிசக்திப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொருவரும் இப்போது எரிசக்திப் பாதுகாப்பின் உத்திசார் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். தேசிய எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய அரசு இதுவரை இல்லாத அளவிலான முதலீடுகளைச் செய்து வருவதாகக் கூறிய பிரதமர், மல்காபூரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய முனையத்தின் திறப்பு விழாவை ஒரு குறிப்பிடத்தக்க உத்திசார் நடவடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார்.