புதுடெல்லி: புதிய டிஜிபிக்கான பெயர் பட்டியலை உரிய காலத்துக்குள் யுபிஎஸ்சிக்கு அனுப்பாமல், பொறுப்பு டிஜிபி நியமிக்கும் கலாச்சாரம் குறித்து மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தெலங்கானா டிஜிபி தேர்வு முறையை 4 வாரங்களுக்குள் நிறைவு செய்ய அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து யுபிஎஸ்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்னுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
யுபிஎஸ்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் நரேஷ் கவுசிக் ஆஜராகி, “அடுத்த டிஜிபிக்கான பரிந்துரை பட்டியலை மாநிலங்கள் அனுப்புவதில் ஏற்படும் தாமதத்தால் தகுதி வாய்ந்த, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பாதிக்கப் படுகின்றனர். பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பல மாநிலங்கள் மதிப்பதில்லை. நிரந்தர டிஜிபி-க்கு பதிலாக பொறுப்பு டிஜிபி நியமிப்பதை விரும்புகின்றன. தெலங்கானா டிஜிபி நியமனத்திலும் இது பொருந்துவதாக உள்ளது. நிரந்தர டிஜிபி கடந்த 2015ல் நியமிக்கப்பட்டு 2017ல் ஓய்வு பெற்றார். அதன் பிறகு பொறுப்பு டிஜிபி தொடர்கிறார்” என்று வாதிட்டார்.
இதற்கு நீதிபதிகள், “உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றாத மாநிலங்களுக்கு எதிராக யுபிஎஸ்சி ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யவில்லை” என கேள்வி எழுப்பினர். மேலும், "தங்களுக்கு வேண்டப்படும் நபரை பொறுப்பு டிஜிபியாக அல்லது தற்காலிக டிஜிபியாக மாநிலங்கள் நியமித்து வருகின்றன. நிரந்தர டிஜிபியை நியமிக்க விரும்பாத மாநிலங்களின் வலையில் சிக்க வேண்டாம்.
பிரகாஷ் சிங் வழக்கின் தீர்ப்பை தெலங்கானா மட்டும் அல்ல, ஏனைய மாநிலங்களும் மதிக்காமல் பொறுப்பு டிஜிபிக்களை நியமித்துள்ளன” என்றும் தெரிவித்து, தெலங்கானா உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த யுபிஎஸ்சி-க்கு கூடுதலாக 4 வாரம் அவகாசம் வழங்கினர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “அடுத்த டிஜிபிக்கான பெயர்களை தெலங்கானா அரசு உரிய நேரத்தில் பரிந்துரைக்கவில்லை என்ற யுபிஎஸ்சியின் ஆட்சேபனையை பதிவு செய்து கொள்கிறோம். இருப்பினும் யுபிஎஸ்சியின் இந்த ஆட்சேபனை, சூழலை மேலும் மோசமாக்கி, நிரந்தர டிஜிபிக்களை நியமிக்காமல் இருக்க உதவிடும். அது பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மாறிவிடும் என்பதால், தெலங்கானா டிஜிபியை தேர்வு செய்யும் குழு கூட்டத்தை விரைவாக நடத்தி அதற்கான பரிந்துரையை விரைவில் மாநில அரசுக்கு யுபிஎஸ்சி வழங்க வேண்டும்.
இவ்வாறு கடிதம் எழுதிய பிறகும் பரிந்துரைகளை வழங்காமல் பிரகாஷ் சிங் வழக்கின் தீர்ப்பை மதிக்காத மாநிலங்களுக்கு எதிராக யுபிஎஸ்சி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். தாமதம் செய்து, தவறிழைக்கும் அதிகாரிகளை பொறுப்பாக்கி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.