புதுடெல்லி: கலாச்சார பிணைப்புகள் மூலம் அமைதியை ஏற்படுத்தலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2025-ம் ஆண்டு சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, எஸ்சிஓ நாடுகளின் கலாச்சாரங்களை மையப்படுத்தி புதிய அமைப்பை உருவாக்க பரிந்துரை செய்தார்.
இதன்படி இந்தியாவின் சார்பில் எஸ்சிஓ கலாச்சார உரையாடல் மன்றம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் சீனா, ஈரான், இலங்கை உட்பட 25 நாடுகள் இணைந்துள்ளன. புதிய அமைப்பின் முதல் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இரு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 25 நாடுகளின் கலாச்சார துறை அமைச்சர்கள் பங்கேற்று உள்ளனர்.
உலகம் ஒரு குடும்பம் என்ற கருத்தை மையமாக கொண்டு நடைபெறும் மாநாட்டில் இந்தியா, யுரேசியா இடையிலான கலாச்சார தொடர்புகள் எடுத்துரைக்கப்பட உள்ளது. இந்தியாவின் பாரம்பரியம், கலை, இலக்கிய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் சிறப்பு கண்காட்சி நடைபெறுகிறது.
டெல்லி புராணா கிலா கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி எஸ்சிஓ கலாச்சார உரையாடல் மன்றத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: உலகின் பல்வேறு பகுதிகளில் போர்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நேரத்தில் இந்தியாவில் கலாச்சார உரையாடல் மன்றம் தொடங்கப்பட்டு உள்ளது. கலாச்சார பிணைப்புகள் மூலம் அமைதியை ஏற்படுத்தலாம். எஸ்சிஓ உறுப்பு நாடுகள் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக கலாச்சார பிணைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி, மொசபடோமியா இடையே வர்த்தகம் நடைபெற்றது. இந்தியா, சீனா, மத்திய ஆசிய நாடுகள் இடையே வர்த்தக வழித்தடங்கள் பயன்பாட்டில் இருந்தன. பல்வேறு நாடுகளை சேர்ந்தோர் இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றனர்.
இந்தியாவில் பழங்கால புராணங்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு உள்ளன. இதை எஸ்சிஓ நாடுகளும் பின்பற்ற வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் அடித்தளம் ஆகும். இதை உலக நாடுகளும் பின்பற்றலாம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பாக். அமைச்சர் நம்பிக்கை
பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் தலைமையிலான குழு டெல்லி மாநாட்டில் பங்கேற்று உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் அமைச்சர் இந்தியா வந்திருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அவர் கூறும்போது, “தெற்காசிய பிராந்தியத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பாகிஸ்தான், இந்தியா இடையிலான உறவு மேம்படும்” என்று தெரிவித்தார்.