மும்பை: ரூ.2 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்ற, 56 லட்சம் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.2 லட்சம் வரை விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல முறையாக பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு, ஊக்கத் தொகையாக ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து தனது அரசு ஜூன் மாதத்தில் முடிவெடுக்கும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருந்தார். அதன்படி, தற்போது அவர் தலைமையிலான அமைச்சரவை இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் ரூ.36,585 கோடி மதிப்பிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். பயிர்க் கடன் பெற்றுள்ள 65 லட்சம் விவசாயிகளில், 56 லட்சம் பேர் இந்தக் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பயனடையவார்கள்.
அதே நேரத்தில், மகாராஷ்டிராவில் தற்போது நடைபெறும் சட்ட மேலவைத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சரவை தெரிவித்துள்ளது.