புது டெல்லி: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாய் சாவித்ரி தேவியின் உடல் ஹரித்துவாரில் தகனம் செய்யப்பட்டது. தனது தாயின் சவப்பெட்டியைத் தோளில் சுமந்து, சிதையைச் சுற்றி வந்து யோகி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தினார்.
உ.பி முதல்வர் யோகியின் தாயார் சாவித்ரி தேவியின் உடல் இன்று காலை ஹரித்வாரின் சந்தி காட்டில் தகனம் செய்யப்பட்டது. மிகவும் உணர்ச்சிகரமான சூழலில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது தாயின் சிதையைச் சுற்றி வந்து, தலைவணங்கி மரியாதை செலுத்தினார்.
தாயாரின் இறுதிப் பயணத்தின்போது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவர் தனது தாயின் சவப்பெட்டியை வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் வரை தோளில் சுமந்து சென்றார், பின்னர் சந்தி காட்டிலும் அதைத் தோளில் சுமந்து சென்றார்.
அவ்வப்போது கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்தபடி, தனது பூர்வீக கிராமமான பவுரியின் பஞ்சூரிலிருந்து ஹரித்வார் வரை தாயின் உடலுடன் அவர் பயணம் செய்தார். யோகியின் தாயாரின் உடலுக்கு கிராம மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முதல்வர் யோகியின் இளைய சகோதரர் மகேந்திர மோகன் பிஷ்த், தாயாரின் சிதைக்குத் தீ மூட்டினார். பாபா ராம்தேவ் மற்றும் சிதானந்தர் உள்ளிட்ட 13 அகாடாக்களைச் சேர்ந்த ஆச்சார்யர்களும் மடங்களின் தலைவர்களும் வேத மந்திரங்களை முழங்க இறுதிச் சடங்குகளை நடத்தினர்.
இந்த நிகழ்வில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உ.பியின் துணை முதல்வர்கள் பிரஜேஷ் பதக் மற்றும் கேசவ் மவுரியா, அமைச்சர் சஞ்சய் நிஷாத் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
முதல்வர் யோகி தனது தாயின் சவப்பெட்டியைத் தோளில் சுமந்து செல்லும் புகைப்படத்தை தன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ’தாய்க்கு இறுதி வணக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மகாபாரதத்திலிருந்து ஒரு ஸ்லோகத்தையும் அவர் பதிவேற்றம் செய்துள்ளார்.