இந்தியா

கார்கே உள்பட 8 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு

சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

மோகன் கணபதி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட 8 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மாநிலங்களவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதியாக மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன் கார்கே, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவைத் தலைவர் அலுவலகத்தில் இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மாநிலங்களவையின் அவைத் தலைவரும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா. நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சட்டம் மற்றும் நீதித் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், பிரியங்கா காந்தி, மாநிலங்களவை உறுப்பினர்களான ஜெயராம் ரமேஷ், பிரஃபுல் படேல், மாநிலங்களவை பொதுச் செயலாளர் பி.சி.மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து, மாநிலங்களவைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மான்சிங் மெராமன் பார்மர், தருண் சுக், அல்கா சிங், ஜிதேந்திர மேக்ஜிபாய் கன்ஜாரியா, ராஜேந்திர ஹீராலால் ஜெயின், எம் நாகராஜா, அதிகாரிமயூம் சாரதா தேவி ஆகிய ஏழு உறுப்பினர்களுக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் மாநிலங்களவை வளாகத்தில் பதவிப் பிரமாணமும் உறுதிமொழியேற்பும் செய்து வைத்தார்.

நான்கு உறுப்பினர்கள் இந்தியிலும், ஒருவர் கன்னடத்திலும், ஒருவர் பஞ்சாபியிலும், ஒருவர் மணிப்புரியிலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இரண்டு உறுப்பினர்கள் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிகழ்ச்சியில் ஹரிவன்ஷ், நட்டா, கிரண் ரிஜிஜு, அர்ஜுன் ராம் மெக்வால், எல் முருகன், சோனியா காந்தி, ஜெயராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், சையத் நசீர் ஹுசைன், பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், பி.சி. மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT