புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100 ஆண்டுகள் பயணத்தை முன்னிட்டு மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: ”வங்க தேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அங்கு இன்னும் 1.25 கோடி இந்துக்கள் உள்ளனர். இவர்கள் ஒன்றிணைந்தால், அங்குள்ள அரசியலமைப்பை பயன்படுத்தி பலனடைய முடியும்.
பாதுகாப்பாக இருக்க அவர்கள் ஒன்றிணைய வேண்டும். போராட வேண்டும் என்றால், ஒற்றுமை அவசியம். எவ்வளவு சீக்கிரம் அவர்கள் ஒன்றிணைகிறார்களோ, அவ்வளவு நல்லது. வங்க தேசத்தில் உள்ள இந்துக்களுக்காக, ஆர்எஸ்எஸ் வரம்புக்கு உட்பட்டு முடிந்ததை செய்யும். அண்டை நாடுகளில் இருந்து நடைபெறும் ஊடுருவல் மிகுந்த கவலையளிக்கிறது. இது பல ஆண்டுகளாக தொடர்கிறது.
வெளிநாட்டினர் யாராவது சட்டவிரோ தமாக தங்கியுள்ளனர் என சந்தேகித்தால், காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். வெளிநாட்டி னருக்கு நாம் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடாது. மக்கள்தொகை கணக்கெடுப்பு, எஸ்ஐஆர் பணிகள் மூலம் வெளிநாட்டினர் பலர் அடையாளம் காணப்படுகின்றனர். அவர்களை இந்த நடைமுறை தானாக வெளியேற்றும்.
மதமாற்றம் மற்றும் ஊடுருவல்: மதமாற்றம் மற்றும் ஊடுருவல் ஆகியவை மக்கள்தொகையில் சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன. சமநிலை, சமூக ஆரோக்கியம் ஆகியவற்றை பராமரிக்க 3 குழந்தைகளுடன் கூடிய குடும்பம்தான் சிறந்தது என வேதங்கள் மற்றும் மருத்துவ கருத்துகளும் தெரிவிக்கின்றன. சமூக நலனுக்காக சில பொறுப்புகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். திருமணமும் சமூக கடமை தான்.
பணியில் இருந்து ஓய்வில்லை: எனக்கு 75 வயது ஆகிவிட்டது. என்னை தொடர்ந்து பணியாற்றும்படி ஆர்எஸ்எஸ் கேட்டுக் கொண்டது. அவர்கள் என்னை ராஜினாமா செய்யும்படி கூறும்போது, நான் பதவியை ராஜினாமா செய்வேன். ஆர்எஸ்எஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் இல்லை. மண்டல மற்றும் வட்டார தலைவர்கள், ஆர்எஸ்எஸ் தலைவரை தேர்வு செய்வர். இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.