லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கங்கை நீரின் மீது சத்தியம் செய்து, உறுதி மொழி எடுத்த ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. லஞ்சமாக கிடைக்கும் பணத்தை தங்களுக்குள் நேர்மையாக பகிர்ந்து கொள்வது தொடர்பாக அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்த வீடியோவில், ஒருவர் வாட்டர் பாட்டிலில் உள்ள கங்கை நீரை அங்குள்ள மற்ற நபர்களின் கைகளில் ஊற்றுகிறார். அதன் பிறகு அவர் “மாநகராட்சிக்கு கிடைக்கும் பணம் 60 கவுன்சிலர்களுக்கும் சமமாகப் பகிரப்படும். குழுவில் உள்ள யாருக்காவது பிரச்சினை ஏற்பட்டால், அனைவரும் ஒற்றுமையாக அவருக்கு ஆதரவாக நிற்போம்” என சத்தியம் செய்கிறார்.
அதைத் தொடர்ந்து மற்ற அனைவரும் அதே வாக்கியங்களை மீண்டும் கூறி சத்தியம் செய்கின்றனர். மேலும், அந்த வீடியோவில் சத்தியத்தை மீறிய ஒருவரை துரோகி என்று குறிப்பிடுவதும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ கவுன்சிலர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சவும்யா குருராணி அளித்த பேட்டியில், “இந்த வீடியோ 2025 நவம்பரில், முந்தைய மாநகராட்சி ஆணையர் பதவியில் இருந்த காலத்தில் பதிவு செய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. அப்படியிருந்தாலும், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.