இந்தியா

‘போராட்டத்தை முடித்துக் கொள்வீர்’ - சிஜேபியினரிடம் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா வேண்டுகோள்

வெற்றி மயிலோன்

புது டெல்லி: "அனைத்து போராட்டக்காரர்களும் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு, இயல்பு நிலையை மீட்டெடுப்பதில் நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்" என்று டெல்லியில் போராட்டம் நடத்தும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர். இந்தச் சூழலில், அந்தக் கட்சியின் இரண்டு பிரதிநிதிகளை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா இன்று சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு குறித்து பேசிய ஜே.பி.நட்டா, “இன்று காலை போராட்டக்காரர்களிடமிருந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவு முதன்முறையாக வந்தது. இதனையடுத்து இன்று காலை 11:50 மணி முதல் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சந்திப்பு சுமுகமான சூழலில் நடைபெற்றது. அவர்களின் குழுவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்கள் மாலை 4 மணியளவில் என்னிடம் எழுத்துப்பூர்வமான மனுவை சமர்ப்பித்தனர்.

அனைத்து போராட்டக்காரர்களும் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு, இயல்பு நிலையை மீட்டெடுப்பதில் நிர்வாகத்துக்கு ஒத்துழைக்குமாறு நான் கேட்டுக்கொண்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, சிஜேபி செய்தித் தொடர்பாளர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் இன்று ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு சவுரவ் தாஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அசுதோஷ் ரங்காவும் நானும் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தோம். எங்களின் பின்வரும் கோரிக்கைகள் குறித்து தங்கள் தலைமையுடன் கலந்தாலோசிக்க நட்டா சிறிது அவகாசம் கோரியுள்ளார்.

நாங்கள் முன்வைத்த 3 கோரிக்கைகள்:

1) சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுவித்தல்.

2) தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.

3) நீட் தேர்வுக்காகத் தயாரான நிலையில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்குதல்.

தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகள் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து உரிய மட்டத்தில் ஆலோசிப்பதாக அமைச்சர் எங்களுக்கு உறுதியளித்தார். இருப்பினும், இதுவரை எந்தவொரு உறுதியான வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அமைதியான முறையில் போராடும் நாங்கள் ஓயமாட்டோம்’ எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT