இந்தியா

கேரள முன்னாள் அமைச்சருடன் உன்னி கிருஷ்ணன் போத்தி இருக்கும் படத்தால் சர்ச்சை

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில், சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளியான உன்னி கிருஷ்ணன் போத்தியுடன் முன்னாள் தேவஸ்வம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இருக்கும் புதிய புகைப்படம் வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது.

போத்தியின் வீட்டுக்கு சுரேந்திரன் சென்றிருந்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் சமீபத்தில் பல்கலைக்கழகத் தேர்வுகளில் முதலிடம் பிடித்த போத்தியின் உறவினர் ஒருவருக்கு சுரேந்திரன் பரிசு வழங்குவது தெரிகிறது. போத்தியின் வீட்டில் முன்னாள் ரான்னி எம்எல்ஏ ராஜு ஆபிரகாமுடன் சுரேந்திரன் இருப்பது போன்ற புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன.

          

இதற்கு பதிலளித்த சுரேந்திரன், "எனக்குப் போத்தியை ஒரு பக்தராக மட்டுமே தெரியும், தங்கம் திருட்டுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என்று மறுத்துள்ளார்.

இந்த வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எஸ்ஐடி தவறியதால், முக்கிய குற்றவாளியான போத்திக்கு சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் எஸ்ஐடி கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் இந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT