சுல்தான்பூர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றம் நேற்று விடுவித்தது.
உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம், ஹனுமன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் மிஸ்ரா. மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரும் பாஜக நிர்வாகியுமான இவர் சுல்தான்பூரில் உள்ள எம்.பி. எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், “2018 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பெங்களூருவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசினார். அவர் மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களைக் கடந்து சென்றது. பிப்ரவரி 2024-ல் ராகுல் நீதிமன்றத்தில் சரணடைந்தார், பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜூலை 2024-ல் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், விசாரணையின்போது புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளையும் நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கின் இறுதி வாதங்கள் அக்டோபர் 6, 2026 அன்று தொடங்கி, அக்டோபர் 12 அன்று நிறைவடைந்தன. அக்டோபர் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இதன்படி, ராகுல் நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, ராகுல் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறிய நீதிபதி சுபம் வர்மா, அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, அங்கு கூடியிருந்த ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள், இந்தத் தீர்ப்பை வரவேற்றதுடன், மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் வாகனம் மோதல்
முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக லக்னோவிலிருந்து சுல்தான்பூருக்கு ராகுல் காரில் சென்று கொண்டிருந்தார். பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் ராகுல் காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. அப்போது, பின்னால் சென்ற ஒரு காரின் மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதியது. இதனால் அடுத்தடுத்து சென்ற பாதுகாப்பு வாகனங்கள் சில மோதிக்கொண்டன. மொத்தம் 4 கார்களும் ஒரு ஆம்புலன்ஸும் இந்த விபத்தில் சிக்கின.
இந்த விபத்தில் ராகுல் காந்தியுடன் பயணித்த காங்கிரஸ் நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து நேர்ந்தபோது ராகுல் வாகனம் வெகு தொலைவில் சென்று கொண்டிருந்தது. இருப்பினும் பாதுகாப்பு வாகனங்கள் மீது ஆம்புலன்ஸ் மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே இந்த விபத்து குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) விசாரிக்க உத்தர பிரதேச மாநில போலீஸ் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.