பஹல்காம் தாக்குதல் நடந்த பைசரன் பள்ளத்தாக்கு. (கோப்புப் படம்)
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 1,597 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. ‘தாக்குதலுக்கான சதி பாகிஸ்தானில் தீட்டப்பட்டது. உள்ளூர் நபர் அடைக்கலம் அளித்ததால், இந்த தாக்குதல் சாத்தியமானது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 25 சுற்றுலா பயணிகளும், உள்ளூர் நபர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தங்களது மதக் கோட்பாடுகளைத் தெரிவிக்கும் ‘கலிமா’வை ஓதச் சொல்லி, பிற மதத்தைச் சேர்ந்த நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் ஃபைசல் ஜாட் என்கிற சுலைமான் ஷா, ஹபீப் தாஹிர் என்கிற ஜிப்ரான் மற்றும் ஹம்சா ஆப்கானி ஆகியோரை பாதுகாப்பு படையினர் கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி நடத்திய ‘ஆபரேஷன் மகாதேவ்’ தேடுதல் வேட்டையில் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்த 1,597 பக்க குற்றப்பத்திரிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல் செய்தது.
அதில் இந்த தாக்குதலுக்கான சதி பாகிஸ்தானில் தீட்டப்பட்டது எனவும், பஹல்காமில் உள்ள உள்ளூர் நபரின் ஆதரவோடு 3 தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹஃபீஸ் சயீத் தலைமையிலான லஷ்கர் இ தொய்பா, ஹபிபுல்லா மாலிக் தலைமையிலான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட் (டிஆர்எப்) ஆகிய அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன் விவரம்; பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளும், கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு பைசரன் அருகே உள்ள உள்ளூர்வாசி பர்வைஸ் அகமது என்பவரது குடிசைக்கு துப்பாக்கிகளுடன் வந்தனர். அவர்களை பர்வைஸின் மாமா பஷீர் அகமது ஜோதர் என்பவர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பர்வைஸ் உள்ளூரில் குதிரை ஓட்டியாக பணியாற்றுகிறார். விருந்தாளிகளாக வந்துள்ள 3 பேரும் காஷ்மீர் முஸ்லிம்களின் விடுதலைக்காக போராடும் ஜிஹாதிகள் என பர்வைஸிடம் அவரது மாமா கூறினார். 3 தீவிரவாதிகளும் பஞ்சாபி கலந்த உருது மொழியில் பேசினர்.
இதனால் அவர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அல்ல; முஜாஹிதீன்கள் என்பதை பர்வைஸ் புரிந்து கொண்டார். தீவிரவாதிகள் தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கிகளை குடிசைக்குள் மறைத்து வைத்தனர். தண்ணீர், தேநீர்,இரவு உணவு சாப்பிட்ட பிறகு, சில ரொட்டிகளை பார்சல் செய்து தரும்படி கேட்டனர். இதை பர்வைஸின் மனைவி தாஹிரா தயார் செய்து கொடுத்தார். இரவு 10 மணி அளவில் 3 பேரும் புறப்பட்டனர். மறுநாள் காலை அவர்கள் பைசரன் பள்ளத்தாக்குக்கு அருகில் காணப்பட்டனர். பள்ளத்தாக்கு பகுதியில் நுழைவதற்கு முன்பு, ஒரு மரத்தடியில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.
மதியம் 2.23 மணி அளவில் தாக்குதலுக்கு புறப்பட்டனர். தங்கள் பையில் இருந்த போர்வையை போர்த்திக் கொண்டனர். அவர்களில் ஒருவர் தனது தலையில் ‘கோப்ரோ' என்ற ஆக்சன் கேமராவை அணிந்தபடி, பூங்காவுக்குள் நுழைந்தார். ஒருவர் தனது எம்-4 கார்பைன் ரக துப்பாக்கியால் அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகள் மீது சுட்டார். அடுத்த சில நொடிகளில், மற்ற 2 தீவிரவாதிகளும் தாபாக்கள் மற்றும் சரிவுப் பகுதிகளில் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கிகள் மூலம் சுட்டனர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் தப்பி ஓடும்போது, அவர்களை பிடிக்க பொதுமக்கள் 3 பேர் முயன்றனர். அவர்களையும் தீவிரவாதிகள் மிக அருகில் வைத்துச் சுட்டுக் கொன்றனர்.
ஒருவரை இடைமறித்து ‘கலிமா' ஓதுமாறு தீவிரவாதிகள் கூறினர். அவர் அதை ஓதியதும் அவர்கள் சுடவில்லை.தீவிரவாதிகள் தங்கள் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய மகிழ்ச்சியை வானில் துப்பாக்கியால் சுட்டுகொண்டாடினர். இவ்வாறு குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.